பொதுமக்கள் கவனத்திற்கு!!!
எல்லா தரப்பினரும் வாங்கி பயன்படுத்தும் வகையிலான அத்தியாவசிய மருந்துப் பட்டியலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. புதிய பட்டியலில் மொத்தம் 384 மருந்துகள் உள்ளன. அத்தியாவசிய மருந்துப் பட்டியல் கடந்த 1996ம் ஆண்டு முதல்முறையாக உருவாக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு இந்த பட்டியலை ஆய்வு செய்ய மத்திய அரசு குழு ஒன்றை அமைத்திருந்தது. அந்த குழு ஆராய்ந்து, அண்மையில் மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு அறிக்கை அளித்தது. இதனை பரிசீலித்த மத்திய அரசு, தேவையற்ற 26 மருந்துகளின் பட்டியலை நீக்கி, அதற்கு பதிலாக 34 வகையான புதிய மருந்துகள் அடங்கிய பட்டியலை சேர்த்துள்ளது.
இதில் பிரதானமாக புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் 4 மருந்துகள் அத்தியாவசிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. செயல்திறன், பாதுகாப்பு, தரம், விலை உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும், குறைந்த விலையில் தரமான மருந்துகளை வழங்க இந்த பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளதாகவும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். முக்கியமானதாக கருதப்படும் ரோட்டா வைரசுக்கு எதிரான தடுப்பூசியும் அத்தியாவசிய பட்டியலில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.