பிரபல முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார்
பிரபல தொழிலதிபரும், பங்குச்சந்தை முதலீட்டாளருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உடல் நலக்குறைவால் காலமானார்.
இந்தியாவின் big bull.. Warren Buffet of India என்று பல பெயர்களை கொண்டு இருப்பது அவ்வளவு எளிது அல்ல என்பது முதலீட்டில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் தெரிந்த விஷயம். ராகேஷ் ஜுன்ஜுன்வாலா என்ன பங்கை வைத்திருக்கிறார்.
அவர் ஏன் அந்த பங்கை வாங்கினார், ஏன் நீண்ட காலமாக இந்த குறிப்பிட்ட பங்கை வைத்திருக்கிறார் என்று வணிக செய்திகளை வெளியிடம் ஊடகங்கள் தினமும் ஒரு செய்தியை வெளியிட்டு கொண்டே இருக்கும்… அந்த அளவிற்கு இந்தியாவின் பங்குச்சந்தையில் கொடி கட்டி பறந்தவர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா… 5 ஆயிரம் ரூபாயில் தன்னுடைய பங்குச்சந்தை பயணத்தை தொடங்கிய இவரின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 45000 கோடி… பங்குச்சந்தை மட்டும் இல்லாமல், சினிமா தயாரிப்பிலும் ஈடுபட்ட இவர், நடிகை ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான இங்கிலிஷ் விங்கிலிஷ், அமிதாப்பச்சன், தனுஷ் நடிப்பில் வெளியான ஷமிதாப் போன்ற படங்களை தயாரித்தும் உள்ளார். 1960ம் ஆண்டு, ஹைதராபாத்தில் பிறந்த இவர், அடிப்படையில் ஒரு பட்டைய கணக்காளர்.. நீண்ட நாட்களாக, சிறுநீரக பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு உபாதைகளால் அவதிப்பட்டு வந்த அவர், இன்று காலை மரணம் அடைந்துவிட்டதாக, மும்பையின் பிரீச் கேண்டி மருத்துவமனை அறிவித்துள்ளது.
இவரின் portfolioவில் இருக்கும் பங்குகள், வளர்ச்சி அடைவது ஒரு புறம் தானாக நடக்கும் என்றாலும், அதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் நல்ல தொகை டிவிடெண்ட் கிடைக்க வேண்டும் என்பதிலும் அதிக கவனம் கொண்டவர் ராகேஷ்.. இவர் வாங்கி வைத்துள்ள பங்குகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பல கோடிகளில் டிவிடெண்ட் ஆக மட்டும் கிடைக்கும். அதில் ஒரு பகுதியை தானமாகவும், நலதிட்டங்கள் செய்யவும் வழங்குவது இவரது வழக்கம். அதிக டிவிடெண்ட் வரும் பங்குகளில் அதிக கவனம் செலுத்துவதால், இவர் KING OF DIVIDENDS என்றும் அழைக்கப்பட்டார்.
அண்மையில், தனக்கு என்று தனியாக 70,000 சதுர அடியில் மும்பையில் ஒரு வீட்டை கட்ட தொடங்கினார்… அந்த வீட்டை கட்ட அவர் வாங்கிய நிலத்தின் மதிப்பு மட்டும் 370 கோடி ரூபாய்… அதுவும், ஒரு முதலீட்டாளர், நல்ல முதலீட்டை தேர்வு செய்வது எப்படி, அதை நல்ல விலை கிடைக்கும் வரை காத்திருந்து வாங்குவது எப்படி என்பதை நீரூபிக்கும் வகையில் இருந்தது. மும்பையில் பெரிய வீடு கட்ட வேண்டும் என்று முடிவு செய்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா 2013ம் ஆண்டில் ஒரு இடத்தை தேர்வு செய்கிறார். அந்த இடத்தில் 12 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. அதில் 6 வீடுகள் STANDARD CHARTERED வங்கியின் வசமும், 6 வீடுகள் HSBC வங்கியின் வசமும் இருந்தன. 2013ம் ஆண்டில் STANDARD CHARTERED வங்கியிடம் இருந்த 6 வீடுகளை 176 கோடிக்கு வாங்கிய ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, 2017ம் ஆண்டு HSBC வங்கி தன்னிடம் இருந்த 6 வீடுகளை விற்பனைக்கு என்று அறிவிக்கும் வரை காத்திருந்தார். அறிவிப்பு வெளியான உடன் அந்த 6 வீடுகளை 195 கோடிக்கு வாங்கி, அவற்றை இடித்து, தன்னுடைய ரசனைக்கு ஏற்ப 70 ஆயிரம் சதுர அடியில், 14 மாடிகள் கொண்ட புதிய வீட்டை கட்ட தொடங்கினார். உண்மையில் ஒரு சொத்துக்கு மதிப்பு இருக்கிறது என்பதை கண்டறிந்தால், அதன் மேல் கண் வைத்து, காத்திருந்து நேரம் வரும் போது அந்த முதலீட்டை தவறவிடக் கூடாது என்பது ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் குணமாகவே இருந்துள்ளது.