ரெபோ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை..
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களின் விகிதத்துக்கு ரெபோ வட்டி என்று பெயர். இந்த வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார். சக்தி காந்ததாஸ் தலைமையில் நடந்த நிதி கொள்கை கூட்டத்துக்கு பிறகு அவரே இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மொத்தம் ஆறுபேர் அடங்கிய இந்த குழுவில் 4 பேர் வட்டி விகிதம் மாற்றம் செய்யப்படவேண்டாம் என்றும், இரண்டு பேர் வட்டி விகிதங்களை மாற்ற வேண்டும் என்றும் வாக்களித்தனர். பணவீக்கத்தை குறைக்கும் நடவடிக்கையாக ரெபோ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்றும் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார். கேஷ் ரிசர்வ் ரேட் எனப்படும் பணத்தின் கையிருப்பு விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்து 4 விழுக்காடாக அறிவித்தது. 2025 ஆம் நிதியாண்டின் ஜிடிபி எனப்படும் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 6.6விழுக்காடாக இருக்கும் என்றும் தெரிவித்தார். முன்னதாக இந்த விகிதம் 7.2 விழுக்காடாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. பணவீக்க இலக்கை 4.5விழுக்காட்டில் இருந்து 4.8 விழுக்காடாக உயர்த்தியும் சக்தி காந்ததாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். விவசாயிகளுக்கு அளிக்கப்படும் ஆவணங்கள் இல்லாத கடன் வரம்பு 1.6லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முறைகேடான கணக்குகளை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
