டெக் நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் ரிசர்வ் வங்கி..
நிதி நிறுவனங்களுக்கு அடுத்தாண்டு முதல் ரிசர்வ் வங்கி கிளவுடு சேவையை அளிக்க இருக்கிறது. உலகிலேயே ஒரு மத்திய வங்கியே கிளவுடு சேவை வழங்குவது இதுவரை மக்கள் கேள்விப்படாத ஒரு அம்சமாகும். அடுத்தாண்டு தொடக்கத்திலேயே இதற்கான பணிகளை ரிசர்வ் வங்கி தொடங்க இருக்கிறது. சிறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இந்த சேவையை தொடங்க இருக்கின்றன. ரிசர்வ் வங்கி சொத்து வளர்ச்சி நிதியில் இருந்து இந்த திட்டத்துக்கு நிதியாக 229.74பில்லியன் ரூபாய் ஒதுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த துறையில் முன்னோடியாக இருக்கும் அமேசான் வெப் சர்வீசஸ், மைக்ரோசாஃப்ட் அசூர், கூகுகள் கிளவுடு உள்ளிட்ட நிறுவனங்களுக்கு போட்டியாக இந்த திட்டத்தை ரிசர்வ் வங்கி தொடங்க இருக்கிறது. கடந்தாண்டு 8.3பில்லியன் அமெரிக்க டாலர்களாக இந்த சேவைகளின் மதிப்பு வரும் 2028-ல் 24.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும் என்று சர்வதேச தரவு கழகம் தெரிவித்துள்ளது. கிளவுடு சேவை பற்றிய அறிவிப்பை கடந்தாண்டு டிசம்பரில் அந்த வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்தார். தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இந்த சேவையை ரிசர்வ் வங்கி செய்ய இருக்கிறது. EY என்ற நிறுவனம் இதன் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளது.
மும்பை மற்றும் ஐதராபாத்தில் தரவு மையங்களை அமைக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கண்டிஷன் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆராய்ச்சி பிரிவான இந்திய நிதிநுட்பம் மற்றும் அதன் சார்பு நிறுவனங்கள் இந்த திட்டத்துக்கு ஆரம்பக் கட்ட பணிகளை செய்து வருகிறது. வரும் ஆண்டுகளில் இந்த திட்டம் படிப்படியாக அதிகரிக்கப்பட இருக்கிறது.