ரூபாய்-ரியாலில் வர்த்தகம் நடத்த ஆயத்தம்
இந்தியா-சவுதி அரேபிய நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் கூட்டம் சவுதி அரேபியாவில் நடைபெற்றது. இதில் இந்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார். இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை அமெரிக்க டாலர்களுக்கு பதிலாக இந்திய ரூபாயில் வாங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ரியால்-ரூபாய் இடையே வர்த்தகம் நடத்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும் சவுதியில் யுபிஐ முறை மற்றும் ரூபே கார்டுகளை அறிமுகப்படுத்த இருதரப்பு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சவுதி அரேபியாவில் இந்திய மருந்து நிறுவனங்கள் பதிவை தானியங்கி முறையில் மாற்றுவதுகுறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கால நிலை மாற்றம் பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. விவசாயம்,உணவு பாதுகாப்பு,ஆற்றல் துறை, தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட 4 பிரதான பிரிவுகளில் 41 தலைப்புகளில் இருநாட்டு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தியாவில் அதிகளவில் முதலீடுகள் செய்வது குறித்தும் இருநாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துவது குறித்தும் வங்கித்துறைகள் குறித்தும் பியூஷ் கோயல் அந்நாட்டு அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினார்.