முகேஷ் அம்பானியின் அசத்தல் திட்டம்..
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை திருபாய் அம்பானி தொடங்கியபோது முதலில் துணிக்கடையில்தான் ஆரம்பித்தார் பின்னர் எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலைகளை நிறுவினார். இந்த நிலையில் அவரின் மகனான முகேஷ் அம்பானி, ஹைட்ரோ கார்பனில் இருந்து டெலிகாம் துறைக்கு மாறினார், மேலும் சில்லறை வணிகத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். ரிலையன்ஸின் இந்த பரிமாற்றம் தற்போது அடுத்தகட்டத்துக்கு சென்றுள்ளது. புதுப்பிக்கத்தக்க தூய்மை ஆற்றலை நோக்கி அந்நிறுவனம் தற்போது நகர்ந்து வருகிறது. பெரிய சந்தை மூலதனம் இல்லாத அதே நேரத்தில் அதிக வருவாய் தரும் தொழில்களைத்தான் ரிலையன்ஸ் நிறுவனம் கையில் எடுத்திருப்பதாக கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது. ஆந்திரபிரதேசத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சார்பில் 65 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பயோ கேஸ் ஆலைகளை ரிலையன்ஸ் நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் திறக்க இருக்கிறது. ஒரு ஆலைக்கு 130 கோடி ரூபாய் செலவிடப்பட இருக்கிறது. இதனை முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி நிர்வகிக்க இருக்கிறார். இந்த ஆலைகளால் இரண்டரை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். விவசாயக் கழிவுகள், கரும்பு சக்கை, நகராட்சி குப்பைகள் உள்ளிட்டவற்றில் இருந்து இயற்கை எரிவாயு எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. கரும்பு சக்கையை தங்களுக்கு வழங்குவது குறித்து அண்மையில் முகேஷ் அம்பானி சர்க்கரை ஆலை உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தையும் நடத்தியதாக கூறப்படுகிறது. அம்பானியைப் போலவே கவுதம் அதானியும் இதே சிபிஜி எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு குறித்த அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார். விவசாயக் கழிவுகளை எரிப்பதற்கு பதிலாக அதன் மூலம் வருவாயை ஈட்ட முடியும் என்றும் அம்பானி மற்றும் அதானி திட்டம் தீட்டியுள்ளனர்