2025 ஐபிஓவுக்கு தயாராகும் ஜியோ..
இந்தியாவில் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட நிறுவனமாக திகழ்வது ஜியோ நிறுவனம். இந்த நிறுவனம் அடுத்தாண்டு ஆரம்ப பங்கு வெளியீடு செய்ய அதன் உரிமையாளரான முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளார். ஐபிஓ வெளியிடுவது பற்றி கடந்த 2019 ஆம் ஆண்டுதான் முகேஷ் அம்பானி அறிவித்தார். ஆனால் அதன் பிறகு பேச்சு மூச்சே இல்லை. கடந்த சில ஆண்டுகளாக 25 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள முதலீட்டாளர்களை அம்பானி இழுத்துள்ளார். இதில் கேகேஆர், ஜெனரல் அட்லாண்டிக் உள்ளிட்டவை முக்கியமான நிறுவனங்கள். ஜியோ நிறுவனத்தில் தற்போது வரை 47கோடியே 90 லடசம் சந்தாதாரர்கள் உள்ளனர். எனினும் நிர்வாகத்தில் உள்ள சவால்களை சரிசெய்வதே பெரிய பணியாக இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் தொடங்கினால், அவருடன் கைகோர்க்க முகேஷ் அம்பானி தயாராக இருக்கிறார். ஏற்கனவே கூகுள், மெட்டா, என்விடியா உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஜியோ கைகோர்த்துள்ளது. அண்மையில் ஹியூண்டாய் நிறுவனத்தின் ஆரம்ப பங்கு மதிப்பு 3.3 பில்லியனாக இருந்த நிலையில், ஜியோவின் மதிப்பு 112 பில்லியனாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஜியோ ஒருபக்கம் வளர்ந்து வரும் நிலையில், ரிலையன்ஸ் ரீட்டெயில் நிறுவனமும் வேகமாக வளர்கிறது. உள்ளே உள்ள சிக்கல்களை தீர்த்துவிட்டுத்தான் ரிலையன்ஸ் ரீட்டெயில் நிறுவனம் ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கு செல்லும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் ரீட்டெயில் நிறுவனத்தின் 12விழுக்காடு பங்குகள் ஏற்கனவே விற்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை வெளிநாட்டினருக்கு விற்கப்பட்டுள்ளன.ரிலையன்ஸ் ரீட்டெயில் நிறுவனம் மட்டும் 7.44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வெளிநாட்டு முதலீடுகளும் செய்யப்பட்டுள்ளன