ரிலையன்ஸ் பங்குகளில் முதலீடு செய்துள்ளீர்களா?
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், அனைவரின் வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இந்நிலையில், தேசிய கொடியின் விற்பனை பன்மடங்கு அதிகரித்து உள்ளது. தபால் துறை சார்பில் மட்டும் 10 நாட்களில் ஒரு கோடி தேசிய கொடிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதில் கவனிக்க வேண்டியது, இந்த நடவடிக்கைகள் எல்லாம் யாருக்கு சாதகமாக செய்யப்படுகிறது என்பது தான். இந்தியாவில் தேசிய கொடிகளை குறிப்பிட்ட ரக துணிகளில் மட்டுமே தயாரிக்க முடியும் என்ற விதிமுறை இருந்தது. உதாரணமாக, கைத்தறியில் தயாரிக்கப்பட்ட பருத்தி, பட்டு அல்லது காதி துணி வகைகளில் மட்டுமே தேசிய கொடியை தயாரிக்க முடியும் என்று இருந்த விதிமுறையை மத்திய அரசு அண்மையில் மாற்றியது. அதன் படி, 2022ம் ஆண்டு மே மாத இறுதியில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி, இந்தியாவில், பாலியஸ்டர் துணியில், இயந்தரங்களால் தயாரிக்கப்படும் தேசிய கொடிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து ஜூலை மாதம் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், கைத்தறியில் தயாரிக்கப்பட்ட பருத்தி, பட்டு அல்லது காதி துணி வகைகளில் தயாரிக்கப்படும் கொடிகளுக்கு எப்படி சரக்கு மற்றும் சேவை வரி வசூல் செய்யப்படுவது இல்லையோ, அதே போல், பாலியஸ்டர் கொடிகளுக்கும் சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இந்நிலையில், தரவுகளின் அடிப்படையில், உலக அளவில் அதிகமாக பாலியஸ்டர் உற்பத்தி செய்யும் நிறுவனம் எது தெரியுமா? ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் லிமிட்டட் தான்… அதாவது 2004 ஆண்டில் இருந்து, இவர்கள் தான் சர்வதேச அளவில் பாலியஸ்டர் தயாரிப்பில் முன்னிலை வகிக்கிறார்கள். இந்நிலையில், இது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழ தொடங்கி உள்ளன. அண்மையில் கொண்டு வரப்பட்ட மாற்றமான, பாலியஸ்டரிலும் தேசிய கொடியை தயாரிக்கலாம், அதற்கு ஜிஎஸ்டி வரி கிடையாது போன்ற மத்திய அரசின் அறிவிப்புகள், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாக செய்யப்பட்ட அறிவிப்புகள் என்ற விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. பெங்களூருவில் மட்டும், இயந்திரங்களில் தயாரிக்கப்படும் பாலியஸ்டர் கொடிகளை விற்பனை செய்ய இலக்குகளும் கூட நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
உதாரணமாக, பெங்களூருவில் மட்டும், 15 லட்சம் பாலியஸ்டர் தேசிய கொடிகளை விற்பனை செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதுவும் ஒரு கொடி 22 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.. இந்த விற்பனையில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு நல்ல லாபம் கிடைக்கும் என்றும், ரிலையன்ஸ் பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. உங்களிடம் ரிலையன்ஸ் பங்குகள் உள்ளதா?….அப்ப ஜாக்பாட் தான் போங்க….