ஓனரை கைமாற்றும் ரெலிகேர் நிறுவனம்
ரெலிகேர் என்டர்பிரைசஸ் நிறுவனம் தனது கிளை நிறுவனமான ரெலிகேர் புரோக்கிங் நிறுவனத்தை வேறொரு நபருக்கு கைமாற்ற செபியின் ஒப்புதலை கேட்டிருந்தது. இந்த ஒப்புதலை செபி அளித்துள்ளது. கடந்த 23 ஆம் தேதி இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. பர்மன் குடும்பத்தினர் தங்கள் பங்குகளை ரெலிகேர் நிறுவனத்தில் அதிகரித்துக்கொள்ள அண்மையில்தான் ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை முன்வைத்தனர். இதில் வரும் 2026 மார்ச் 31 -க்குள் அதிகரித்துக்கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு ரிசர்வ் வங்கி அனுமதிக்கவில்லை. யாரை புதிய இயக்குநராக நியமிக்கப்போகிறீர்கள் உள்ளிட்ட விவரங்களை அளிக்க ரிசர்வ் வங்கி கோரியிருந்தது. இதனிடையே நிதி தவறாக செல்வதை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய விசாரணையையும் ரெலிகேர் என்டர்பிரைசஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்த விசாரணை அறிக்கை நிறுவனத்தின் இயக்குநர்களிடம் அளிக்கப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. விசாரணை அறிக்கை மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தைக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், நிறுவனத்தின் இயக்குநர்கள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த அறிக்கையை ரிசர்வ் வங்கி, செபி உள்ளிட்ட அமைப்புகளுக்கும் அனுப்பியுள்ளதாகவும், நிர்வாகத்தை சீரமைக்கும் நடவடிக்கைகளில் முழு கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அந்த நிறுவனம் கூறுகிறது. செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை நிலவரப்படி அந்த நிறுவன பங்குகள் 0.4% குறைந்து 307ரூபாய் 90 காசுகளாக விற்பனையாகிறது. புதிய முதலாளி யார் என்பதை அந்த நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.