சோலார் தகடுகளுக்கு கட்டுப்பாடுகள்..
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட இருக்கிறது. அதன்படி வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அரசுத்துறை திட்டங்களுக்கு வழங்கப்படும் சோலார் தகடுகள் குறிப்பிட்ட பட்டியலில் இருந்து வாங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் உள்ளூர் உற்பத்தி நிறுவனங்களாக உள்ளன. இந்த பட்டியல் என்பது கடந்த 2021ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டவை. தற்போது வரை 72 நிறுவனங்கள் இந்த பட்டியலில் இருக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சோலார் பேனல்கள் உற்பத்தி துறையும், விற்பனையும் மந்தகதியில் இருப்பதாக கூறப்படுகிறது. சோலார் தகடுகளில் கிடைக்கும் மின்சாரத்தை ஆற்றலாக மாற்றுவதுடன் அதிகப்படியான சோலார் ஆற்றலை கிரகித்து சேமிக்க சில நிறுவனங்களும் களமிறங்கியுள்ளன. சொந்த பணத்தில் செலவு செய்து சோலார் தகடுகள் அமைப்போருக்கு இந்த பட்டியல் பொருந்தாது. இந்தியாவிற்குள் இருக்கும் உற்பத்தியாளர்கள் வேஃபர் எனப்படும் பொருளை குறைவாகவே தயாரித்து வருகின்றனர். உள்ளூரில் உற்பத்தியாகும் தகடுகளுக்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் இறக்குமதியை நம்பியிருக்கும் தேவை குறைவதாகவும் ஆற்றல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. என்னதான் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை கிடைத்தாலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தகடுகள் இன்னமும் விலை குறைவாகவே இருப்பதாக அந்த துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் 2026 ஆம் ஆண்டு,இந்தியாவிற்குள் உற்பத்தி செய்யப்படும் சோலார் தகடுகளின் அளவு 95 முதல் 100 ஜியாவாட் அளவுக்கு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சோலார் தகடுகள் தயாரிக்கும் பணிகளில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டாடா பவர் கம்பெனி, ஜே.எஸ்.டபிள்யு உள்ளிட்டி நிறுவனங்கள் குதித்து உள்ளன.