கணிப்புகளை கடந்த ரிலையன்ஸ்..
இந்தியாவின் மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த மார்ச்சுடன் முடிந்த காலாண்டின் நிகர லாபம் 19 ஆயிரத்து 407 கோடி ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு ஒப்பிடுகையில் 2.4 விழுக்காடு வளர்ச்சியாகும். அந்த நிறுவனத்தின் வருவாய் என்பது வழக்கத்தை விட 10 விழுக்காடு உயர்ந்து அதாவது 2லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கிறது. எண்ணெய் முதல் ரசாயனங்கள் வரை அனைத்து துறை பங்குகளையும் வைத்துள்ள ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில், குறிப்பிடத்தகுந்த வருவாய், சில்லறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் மூலமாகவே கிடைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் டிவிடன்ட் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அந்த ஆலோசனையின் முடிவில் ஒவ்வொரு பங்குக்கும் தலா 5 ரூபாய் 50 பைசா டிவிடண்ட்டாக அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மாற்ற முடியாத டிபன்சர்கள் மூலம் திரட்டவும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.
