இந்திய ரூபாய்க்கு அதிகரிக்கும் அழுத்தம்..

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக ரிசர்வ் வங்கி தலையிட இருக்கிறது. வரும் பிப்ரவரி மாதம் ரெபோ வட்டி விகிதம் குறைக்கப்படுமா என்பது குறித்து ஆலோசித்தும் முடிவெடுக்கப்பட இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர், புதிய துணை ஆளுநர், 3 புதிய புற உறுப்பினர்கள் என முற்றிலும் புதிய குழு ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டத்தை நடத்த இருக்கிறது. வெளிநாட்டு பண கையிருப்பில் உள்ள அழுத்தம்பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது. இந்தியாவின் வெளிநாட்டு பண கையிருப்பு நடப்பு காலாண்டில் 50 பில்லியன் அமெரிக்க டாலர் குறைந்துள்ளதாக கடந்த 13 ஆம் தேதி தரவுகள் தெரிவிக்கின்றன. கடன்கள் மீதான வட்டி விகிதத்தை குறைத்தால் மேலும் அழுத்தம் அதிகமாகி இந்திய ரூபாயின் மதிப்பு இன்னும் குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். கடந்த மே மாதம் 2022 முதல் பிப்ரவரி 2023 வரை இந்திய ரிசர்வ் வங்கி, தனது கடன் விகிதங்களை தொடர்ந்து உயர்த்தி வந்தது. இதனால் தற்போது வரை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் 6.5%ஆகவே தொடர்கிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வளர்ச்சி குறைவு உள்ளிட்ட அம்சங்கள் இந்திய ரூபாயின் மதிப்பு மீது அழுத்தத்தை அதிகரித்து வருகிறது.