1 கோடி பத்தாதே..
இன்றைய காலகட்டத்தில் 1கோடி ரூபாய் என்பது ஒரு வணிகத்தை தொடங்க போதுமானதாக இல்லை என்று ஆதித்யா பிர்லா குழும தலைவர் குமார்மங்கலம் பிர்லா தெரிவித்துள்ளார். நிகில் காமத் என்பவருடன் நடந்த பாட்காஸ்டில் இதனை அவர் தெரிவித்துள்ளார். ஒழுக்கம் மற்றும் நம்பிக்கையால்தான் தலைமை குணம் வளரும் என்று கூறியுள்ள அவர், வேலை ஆட்களை நிர்வகிப்பது மிகவும் முக்கியம் என்று கூறியுள்ள அவர், தனது நிறுவனத்தில் 1.8லட்சம் பேர் வேலை செய்வதாக கூறினார். கார்பரேட்டில் கோபம் அடைந்தால் உங்கள் கட்டுப்பாட்டை நீங்களே இழப்பதாக அர்த்தம் என்று கூறிய குமார் மங்கலம், 29 ஆண்டுகளில் 18 முறை கோபமடைந்ததாக கூறினார். வருங்காலத்தின் மீதான இலக்கு கொண்டுள்ள 1 அல்லது 2 பேருடன்தான் வணிகத்தை தொடங்க வேண்டும் என்று தெரிவித்துள்ள அவர், புதுப்புது வகையில் யோசிப்பதுதான் ஒரு வணிகத்தின் இதயம் என்று கூறினார். தனது தந்தையுடன் 18 வயது முதலே மீட்டிங்கில் பங்கேற்றது நிஜமான எம்பிஏ படித்தது போன்று இருந்தது என்றார். ஆதித்யா பிர்லா குழுமத்தை தனது 28 ஆவது வயதில் தந்தையின் திடீர் மறைவை அடுத்து குமார் தலைமை ஏற்றார். தனது தாத்தா பெரிய வியாபாரியாக இருந்தபோதிலும் 5 குர்த்தா, 3 சூட்கள் மட்டுமே கடைசிகாலத்தில் வைத்திருந்ததாக கூறினார். வளர வேண்டுமெனில் உற்சாகமான குழுவுடன் பணியாற்ற வேண்டும் என்றும் வளர்ந்துவிட்ட பிறகு சமூகத்துக்கு ஏதேனும் பொறுப்புடன் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். தாம் செய்யும் சமூக சேவையை விளம்பரப்படுத்த தமக்கு விருப்பமில்லை என்றும் அதனை செய்யக்கூடாது என்றும் குமார் மங்கலம் தெரிவித்தார்.