ரூ.2லட்சம் கோடி மாயம்..

தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டியின் முன்னணியில் உள்ள 50 நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்த டாடா மோட்டார்ஸ் மிக மோசமான சரிவை கண்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் ஒரு பங்கின் விலை 1179 ரூபாயாக இருந்த நிலையில் 44 விழுக்காடு சரிவை கண்ட அந்த நிறுவனம், சந்தை மூலதனத்தில் 1லட்சத்து 99 ஆயிரம் கோடி ரூபாயை இழந்துள்ளது. தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் விலை 662 ரூபாயாக சரிந்துள்ளது. சீனா மற்றும் பிரிட்டனில் ஜாகுவார் லேன்ட் ரோவர் கார்களுக்கு வரவேற்பு குறைந்ததால் டாடா மோட்டார்ஸ் இந்த மிகமோசமான சரிவை கண்டுள்ளது. நடுத்தர மற்றும் கனரக வணிக வாகனங்களின் விற்பனையும் இந்தியாவில் குறைந்துள்ளது இதுவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சந்திக்கும் மிக முக்கிய பிரச்சனையாக கருதப்படுகிறது. ஐரோப்பிய ஆட்டோமொபைல்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பதால் நிலைமை இன்னும் மோசமாக மாறும் என்று கருதப்படுகிறது. இந்தியாவிற்குள் டெஸ்லா வருவதும் டாடா மோட்டார்ஸுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்ற அச்சமும் நிலவுகிறது.அதே நேரம் டெஸ்லா கார்களை பலதரப்பினர் வாங்கப்போவதில்லை என்றும், சிலர் மட்டுமே அதில் கவனம் செலுத்துவார்கள் என்பதால் பெரியளவு பாதிப்பு டாடா மோட்டார்ஸுக்கு இருக்காது என்று நோமுரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெரிய சரிவை கண்டுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இந்த தருணத்தில் அதிக முதலீடுகளை மக்கள் செய்யலாமா என்றும் சிலர் யோசித்து வருகின்றனர். நீண்டகால முதலீட்டாளர்களுக்கு இந்த சரிவு மிகச்சிறந்த வாய்ப்பு என்றும், 930 ரூபாய் வரை டார்கெட் பிரைஸ் வரலாம் என்பதால் முதலீடு நல்லது என்கிறது சிஎல்எஸ்ஏ நிறுவனம், இதேபேல் 935 ரூபாயை டார்கெட் மதிப்பாக பிஎன்பி பரிபாஸ் நிறுவனம் கணித்துள்ளது.