ரூ.28000 கோடி எல்லாம் முடியாது!!! ரூ.20000 கோடி தருகிறோம்!!!!
மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் இயங்கி வருகின்றன. மாறி வரும் சர்வதேச கச்சா எண்ணெய் விலை காரணமாக இந்த நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக பெரிய அளவு இழப்புகளை சந்தித்து வருகின்றன. இந்த சூழலில் இழப்பை சரி செய்ய 28 ஆயிரம் கோடி ரூபாயை இந்த 3 பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அளிக்க வேண்டும் என்று பெட்ரோலிய அமைச்சகம் கோரியிருந்தது. ஆனால் நிதியமைச்சகம் 200 பில்லியன் பணத்தை மட்டுமே அளிக்க ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இறுதி கட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் உள்ள 90 விழுக்காடு பெட்ரோலிய தேவைகளை இந்த 3 நிறுவனங்களும் பூர்த்தி செய்கின்றன.மத்திய அரசு அளிக்க உள்ள 20 ஆயிரம் கோடி ரூபாய் பணம் ஓரளவு இந்த 3 நிறுவனங்களுக்கு ஆறுதல் தரும் என்கின்றனர் நிபுணர்கள். நடப்பு நிதியாண்டில் எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட மானியம் 5 ஆயிரத்து 800 கோடி ரூபாயும், 1.5 டிரில்லியன் அளவுக்கு உரத்துக்கு மானியமும் அளித்துள்ளதால் அரசுக்கு நிதி சிக்கல் தொடர்கிறது என்கிறார்கள் நிதி ஆய்வாளர்கள். இந்தியாவில் அதிக செலவு பிடிக்கும் பெட்ரோலிய இறக்குமதி பொருளாக சமையல் எரிவாயு உள்ளது. சவுதியில் இருந்தே அதிகளவு எல்பிஜி எனப்படும் சமையல் எரிவாயுவை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.