ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவு..
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத புதிய குறைந்த உச்சமாக 84ரூபாய் 05 பைசாவாக குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்வு கூறப்படுகிறது. மேலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் இருந்து அதிகப்படியான தொகையை வெளியே எடுத்துள்ளதும் காரணியாகும். மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக அக்டோபரில் 10 %அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. வியாழக்கிழமை மட்டும் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 3.5%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஒரு பேரல் பிரென்ட் ரக கச்சா எண்ணெய் 79.1 டாலராக அதிகரித்துள்ளது. 85 விழுக்காடு எரிபொருளை இந்தியா இறக்குமதி மட்டுமே செய்கிறது. கடந்த 2023-24 நிதியாண்டில், இந்தியா 139 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்திருக்கிறது.
அதேநேரம் இந்தியாவின் வெளிநாட்டு பண கையிருப்பு கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நிலவரப்படி இதுவரை இல்லாத உச்சமாக 704.9பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. அமெரிக்க பெடரல் ரிசர்வ், அடுத்த மாதம் கடன்கள் மீதான வட்டியை முழுமையாக குறைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த காரணிகளால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ந்திருக்கின்றது.