திரும்ப வருவேன்னு சொல்லு…
ரிசர்வ் வங்கி விதிகளை பின்பற்றாததால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உள்ளான பேடிஎம் நிறுவனத்தின் பேமண்ட் பேங்க் பிரிவு மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என்று அதன் நிறுவனர் விஜய் ஷேகர் சர்மா தெரிவித்துள்ளார். டோக்கியோவில் நடந்த நிதிநுட்ப கருத்தரங்கில் பங்கேற்ற விஜய் ஷேகர் சர்மா,உங்களுடன் பணியில் இருப்பவர்களோ,ஆலோசகரோ சரியான முடிவை உங்களுக்கு தராமல் போகலாம் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். பேடிஎம் மற்றும் பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் ஆகியவை தனித்தனியாக இயங்கினாலும் பேடிஎம் பேமண்ட் பேங்க்ஸ் அந்தளவுக்கு பிரபலமாகவில்லை என்றே சொல்லலாம். கடந்த பிப்ரவரியில் பேமண்ட் வங்கி பிரிவின் இயக்குநர் பதவியில் இருந்து சர்மா விலகியிருந்தார். இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மத்திய ரிசர்வ் வங்கி சரியான கடிவாளம் போட்டு வருவதாகவும் அவர் தனது கருத்தை தெரிவித்தார். புதிய பேமண்ட்களை பெற ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில் அது பற்றி பேசிய சர்மா, இந்திய ரிசர்வ் வங்கியை பாராட்டினார். பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 45 விழுக்காடு விழுந்துவிட்டன. தற்காலிக முயற்சியாக பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கியில் இருந்த பணத்தை எடுக்க ஆக்சிஸ் வங்கியின் உதவியை பேடிஎம் நிறுவனம் நாடியுள்ளது. ஆசியாவின் மிக முக்கிய நிறுவனமாக பேடிஎம் நிறுவனத்தை உருவாக்க விரும்புவதாகவும் சர்மா குறிப்பிட்டார். ஒரு விஷயத்தில் தெளிவு இருந்தால் அதில் விடா முயற்சியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்றும் சர்மா குறிப்பிட்டார். புதிய சவால்களை சந்திப்பதாகவும், அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் சர்மா குறிப்பிட்டார்.