நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க திட்டம்..
2025-26ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5விழுக்காடாக நிதி பற்றாக்குறையை வைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2024-25 நிதியாண்டில் இந்த நிதி பற்றாக்குறை 5.1 விழுக்காடாக இருக்கும் என்றும் நிதி அமைச்சர் கணித்துள்ளார். 2023-24 நிதியாண்டில் இது 5.8%ஆக இருந்தது. இந்தாண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு உள்கட்டமைப்புகளுக்கு நிதி ஒதுக்குவதில் கவனம் செலுத்தப்பட்டது. வலுவான வரி வசூல் மற்றும் செலவினங்கள் காரணமாக நிதி பற்றாக்குறை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். வரும் ஏப்ரல் 1 முதல் மத்திய அரசு 14.13 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாகவும், தற்போது வாங்கப்பட்டுள்ள கடன் 15.43 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
2021 ஆம் ஆண்டில் நிதி பற்றாக்குறை என்பது 9.2%ஆக இருந்தது. இந்த நிலையில் 2025-26 காலகட்டத்தில் 4.5%ஆக குறைக்க வேண்டிய அவசியம் இருப்பதாக கூறினார். இந்தியாவில் அதிகம் பேரிடம் இருந்து வரிகள் வசூலிக்கப்பட்டு வருவதால் பொருளாதார நடவடிக்கைகளில் கவனம் செலுத்த முடிவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் டிசம்பர் வரையிலான 9 மாத காலகட்டத்தில் நிதி பற்றாக்குறை என்பது 9.82 லட்சம் கோடி ரூபாயாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் ஜனவரி 11 ஆம் தேதி வரை 81 விழுக்காடு வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. மத்திய ரிசர்வ் வங்கியில் இருந்து 87,416 கோடி ரூபாய் உபரி நிதி மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இது அரசாங்கத்துக்கு திட்டங்கள் வகுப்பதில் உதவிகரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.