15,000 கோடி நிதி திரட்ட எல்.ஜி.க்கு செபி ஒப்புதல்..

மின்சாதன உற்பத்தியில் தனித்துவம் பெற்ற எல்ஜி நிறுவனம் ஆரம்ப பங்கு வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி இசைவு தெரிவித்துள்ளது. தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் எல்ஜி நிறுவனம், 15,000 கோடி ரூபாயை திரட்ட முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கடந்த டிசம்பர் 6 ஆம் தேதியே விண்ணப்பம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. எல்ஜி நிறுவனத்தில் இருந்து 15 விழுக்காடு பங்குகளை பிரித்து எல்ஜிஎலெக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனத்துக்கு அளித்து அந்த பங்குகளை விற்று ஆரம்ப பங்கு முதலீடுகளை அந்நிறுவனம் பெற இருக்கிறது. எல்ஜிஎலெக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனத்தின் பங்கு மதிப்பு தற்போது வரை 1 டிரில்லியன் இந்திய ரூபாயாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எல்ஜி நிறுவனம் ஆரம்ப பங்கு வெளியிட்டால் அது இந்தியாவின் 5 ஆவது பெரிய ஐபிஓவாக இருக்கும். ஏற்கனவே ஹியூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் 27,870 கோடி ரூபாய் நிதியை கடந்தாண்டு முதலீடாக பெற்றிருந்தது. சாம்சங்குக்கு அடுத்தபடியாக வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையில் எல்ஜி நிறுவனம் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆரம்ப பங்குகளை எல்ஜி நிறுவனம் வெளியிடுவதற்கு மார்கன் ஸ்டான்லி இந்தியா, ஜே.பி. மார்கன் இந்தியா, ஆக்சிஸ் கேபிடல், சிட்டி குரூப் குளோபல் மார்கெட்ஸ் இந்தியா ஆகிய நிறுவனங்கள் லீட் மேனேஜர்களாக திகழ உள்ளனர். பங்குச்சந்தை ஆவணங்களின்படி எல்ஜி EI நிறுவனம் ஆண்டுதோறும் 7 விழுக்காடு வளர்ச்சியை கடந்த 5 ஆண்டுகளாக கண்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த வளர்ச்சி 12%ஆக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. எல்ஜிஈஐ நிறுவனத்தின் வருவாய்க கடந்த நிதியாண்டில் 21,352 கோடி ரூபாயாக உள்ளது. சாம்சங் இந்தியா எலெக்ட்ரானிஸ் நிறுவனத்தின் வருவாய் என்பது 99,541.6 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.