10லட்சம் கோடி ரூபாய் இழப்பு..
இஸ்ரேல் – ஈரான் சண்டை காரணமாக இந்திய பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்களுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு நேரிட்டது. இஸ்ரேல் – ஈரான் இடையே கடுமையான சண்டை நடந்து வரும் நிலையில், ஆசியப் பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி காணப்பட்டது.பாதுகாப்பான முதலீட்டை மக்கள் தேடுவதாலும், ஏற்கனவே முதலீடு செய்த தொகையை பலரும் விற்று வருவதாலும் சரிவு ஏற்பட்டது. காலையில் ஆயிரத்து 200 புள்ளிகள் வரை சரிந்த மும்பை பங்குச்சந்தை, பிற்பகலிலும் வீழ்ந்தது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஆயிரத்து 769 புள்ளிககள் சரிந்து 82 ஆயிரத்து 497 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியிலும் 546புள்ளிகள் சரிந்து 25,250 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சி காரணமாக முதலீட்டாளர்களுக்கு 9 லட்சத்து 60 ஆயிரம்கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. BPCL, எல் அண்ட் டி, டாடா மோட்டார்ஸ், ஃபின்சர்வ், ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் பெரிய சரிவை கண்டன. ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ONGC உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன. இஸ்ரேல் ஈரான் இடையேயான மோதல் , கச்சா எண்ணெய் விலை உயர்வு,செபியின் விதிகள் கடுமையாக்கப்பட்டது, மற்றும் சீனாவின் பொருளாதார மீட்பு அறிவிப்பு குறித்த காரணங்கள் பங்குச்சந்தை சரிவுக்கு முக்கியமான காரணிகளாக கூறப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. புதன்கிழமை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை, வியாழக்கிழமை மேலும் 80 ரூபாய் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. ஒருகிராம் தங்கம் 10ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 110 ரூபாயாகவும், ஒரு சவரன் 56 ஆயிரத்து 880 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 101 ரூபாயாகவும். கட்டி வெள்ளி விலை கிலோ 1லட்சத்து ஆயிரம் ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல், சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீட்டை அதிகரித்துள்ளதால் சென்னையில் விலை உயர்ந்துள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் உயரவே வாய்ப்புள்ளதாகவும் வணிகர்கள் கூறுகின்றனர்.