முதலீட்டாளர்களுக்கு ரூ.6லட்சம் கோடி லாபம்..

வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகள் குறிப்பிடத்தகுந்த ஏற்றம் கண்டதால் முதலீட்டாளர்களுக்கு 6 லட்சம் கோடி ரூபாய் லாபம் கிடைத்தது. மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் மஹாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றதால் இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 993 புள்ளிகள் உயர்ந்து 80 ஆயிரத்து 109 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது.தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 315 புள்ளிகள் உயர்ந்து 24ஆயிரத்து 221 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்தது. ஓஎன்ஜிசி, எல்அன்ட் டி, பாரத் எலெக்ட்ரானிக்ஸ், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலையேற்றம் கண்டன. இதேபோல் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டெக் மஹிந்திரா, இன்போசிஸ், மாருதி சுசுகி, பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவன பங்குகள் விலை சரிந்தன. கடந்த வாரத்தில் தொடர்ந்து உயர்ந்து வந்த ஆபரணத்தங்கம் விலை நேற்று சவரனுக்கு 800 ரூபாய் சரிந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 7200 ரூபாயாகவும், ஒரு சவரன் 57,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் 101 ரூபாயாகவும், கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 1லட்சத்து ஆயிரம் ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி சேதாரத்தையும் சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.