அதிர வைத்த அமெரிக்க அறிவிப்பு..
உலகின் பல நாடுகளின் பொருளாதார நிலை அமெரிக்காவின் சந்தை நிலவரம் மற்றும் அமெரிக்காவின் அரசியல் நகர்வுகளை ஒட்டியே இயங்கி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த வாரத்தில் வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதில் ஜூலை மாத வேலைவாய்ப்பின்மை 4.3விழுக்காடாக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இது அமெரிக்காவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது கடன்கள் மீதான வட்டி விகிதத்தை 4.25-4.5விழுக்காடாக குறைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அந்த வட்டி விகிதங்கள் குறைக்கப்படாமலேயே இருக்கின்றன. 2025 ஆம் ஆண்டுக்குள் கடன்கள் மீதான வட்டி விகிதத்தை 200 அடிப்படை புள்ளிகளை குறைக்கவும் பெடரல் ரிசர்வ் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் 25 முதல் 54 வயதுள்ளவர்களின் வேலைவாய்ப்பின்மை 3.7%-ல் இருந்து 4.3%ஆக அதிகரித்துள்ளது. அதிக வட்டியில் கடன் வாங்கியிருந்த அமெரிக்கர்களுக்கு வட்டி குறையும் பட்சத்தில் அவர்கள் பணம் செலுத்தும் அளவும் குறையும் என்பதால் வட்டி குறைப்பு மட்டுமே பணவீக்கத்தை மீட்கவும், பொருளாதார மீட்பு நடவடிக்கைக்கும் சரியாக இருக்கும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள், பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது அடுத்த மாதம் நடக்க உள்ள பெடரல் ரிசர்வ் கூட்டத்தில் தெரிந்துவிடும்.