5 நாட்களில் 16 லட்சம் கோடி நஷ்டம்..
இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் காரணமாக கடந்த 5 வேலை நாட்களில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு 16லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. பங்குச்சந்தைகளில் 4ஆயிரத்து 100 புள்ளிகள் வரை இந்த 5 நாட்களில் சரிவு ஏற்பட்டது. இது மட்டுமின்றி சீனாவின் பொருளாதார மீட்பு நடவடிக்கையும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கடந்த 27 ஆம் தேதிக்கு பிறகு மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 4148 புள்ளிகள் குறைந்துள்ளது. இதனால் சந்தைகளில் முதலீட்டாளர்களுக்கு 15.9 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் 2022க்கு பிறகு இந்திய பங்குச்சந்தைகள் 4%க்கும் அதிமான இழப்பை இந்த வாரம்தான் சந்தித்துள்ளது. மிகமுக்கியமாக சீனா அண்மையில் பொருளாதார மீட்பு நடவடிக்கையாக சில நிதியுதவியை அறிவித்தது. இதனால் இந்தியாவுக்கு வரவேண்டிய வெளிநாட்டு முதலீடுகள் சீனா பக்கம் சென்றுள்ளன. கடந்த 4 வேலை நாட்களில் மட்டும் இந்தியாவில் இருந்து 32,000கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளை முதலீட்டாளர்கள் வெளியே எடுத்துள்ளனர். அதிலும் குறிப்பாக வியாழக்கிழமை மட்டும் 15,243 கோடி ரூபாயை அவர்கள் வெளியே எடுத்துள்ளனர். ஈக்விட்டி சந்தைகள் விழுந்த இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஏராளமான பணக்காரர்கள் பரஸ்பர நிதியில் முதலீடுகளை செய்து வருகின்றனர். குறிப்பாக மியூச்சுவல் ஃபன்ட்ஸ்களில் மட்டும் 1.86லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. 2 ஆம் காலாண்டின் முடிவுகள் அடுத்தவாரம் முதல் வெளிவரத் தொடங்கும் என்பதால் அடுத்தவாரம் மீண்டும் பங்குச்சந்தைகளில் ஏற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகளும் வெளியாக உள்ளதால் முதலீட்டாளர்கள் குவிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.