3 ஆவது நாளாக சரிந்த பங்குச்சந்தைகள்

இந்திய பங்குச்சந்தைகளில் 3-ஆவது நாளாக வியாழக்கிழமை சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டு எண் சென்செக்ஸ் 203 புள்ளிகள் குறைந்து 75 ஆயிரத்து 735 புள்ளிகளாகவும்,தேசிய பங்குச்சந்தையில் குறியீட்டு எண் நிஃப்டி 20 புள்ளிகள் குறைந்து 22 ஆயிரத்து 913 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. ஸ்ரீராம் பைனான்ஸ், என்டிபிசி, பாரத் எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்து முடிந்தன.எச்டிஎஃப்சி வங்கி, மாருதி சுசுகி, எச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தன. ஆட்டோமொபைல், உலோகம், ஊடகம், ஆற்றல் துறை, ரியல் எஸ்டேட் துறை பங்குகள் 2 விழுக்காடு வரை உயர்ந்தன.ITC, கஜாரியா செராமிக்ஸ் உள்ளிட்ட 150-க்கும் அதிகமான நிறுவனப் பங்குகள் கடந்த ஓராண்டில் இல்லாத சரிவைக் கண்டன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து இதுவரை இல்லாத புதிய உச்சமாக 64 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த திங்கட்கிழமை முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.ஒரு சவரன் தங்கம் விலை திங்கட்கிழமை 400 ரூபாயும், செவ்வாய்க்கிழமை 240 ரூபாயும் உயர்ந்தது.நேற்று சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்த தங்கத்தின் விலை, 64 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்கப்பட்டது.இந்நிலையில், இன்று சவரனுக்கு மேலும் 280 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 64 ஆயிரத்து 560 ரூபாய் என்ற புதிய உச்சத்தைத் தொட்டது.ஒரு கிராம் தங்கம் விலை 35 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 70 ரூபாயாக உள்ளது.கடந்த சில நாட்களாக மாற்றமின்றி இருந்து வந்த வெள்ளி விலை, இன்று கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 109 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.கட்டி வெள்ளி ஒரு கிலோ 1 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.கடந்த 4 நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கம் விலை ஆயிரத்து 440 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை 65 ஆயிரம் ரூபாயை நெருங்கி வருவதால் குறைந்த வருவாய் உள்ள குடும்பத்தினர் தங்கத்தை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விலைகளுடன், 3 விழுக்காடு ஜிஎஸ்டி மற்றும் செய்கூலி, சேதாரம் ஆகியவை சேர்க்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும்