உணவுப்பொருள் விலைவாசியால் தவிப்பு..

இந்தியாவின் நடுத்தர வருவாய் உள்ள குடும்பத்தினரின் பட்ஜெட்டில் உணவுப்பொருட்கள் விலைவாசி உயர்வு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கடந்த 3 அல்லது 4 மாதங்களாக நகர்புறங்களில் உள்ள நடுத்தர வருவாய் உள்ள குடும்பத்தினரின் பட்ஜெட்டில் இது பெரிய தாக்கத்தை உண்டாக்குகிறது. இதனால் பெரிய நிறுவனங்களுக்கும் இழப்பு ஏற்படுகிறது. பெருந்தொற்றுக்கு பிறகு பொருளாதார மீட்புக்கு பெரிதும் உதவியது நகர்புற மக்கள் பொருட்கள் வாங்கியதுதான் என்று கூறப்படுகிறது. இந்த நிலை தற்போது தலைகீழாக மாறியுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டுக்கு பிறகு நெஸ்ட்லே நிறுவனத்தின் கிட்கேட் உள்ளிட்ட பிரபல பிராண்டுகள் தங்கள் விற்பனை குறைந்துள்ளதாக பதிவிட்டுள்ளனர்.
நடப்பு நிதியாண்டில் இந்தியா 7.2% வளர்ச்சியை பெறும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை மந்தமடைந்திருப்பது இந்திய பொருளாதாரத்தையும் சரிய வைக்கிறது. நடுத்தர குடும்பத்தினர் சில விஷயங்களை தவிர்ப்பதாக சிட்டி வங்கி குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக விமான டிக்கெட், எரிபொருள் உள்ளிட்டவற்றின் பயன்பாட்டை இந்தியாவில் நகரத்தில் உள்ள மக்கள் குறைத்திருப்பதாகவும் அந்த வங்கி குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் பிற பொருட்கள் பணவீக்கம் 5 %ஆக கடந்த 12 மாதங்களாக உள்ளது. ஆனால் உணவுப்பொருட்கள் விலை மட்டும் 8%ஆகவே தொடர்கிறது. காய்கனிகள், பருப்பு வகைகள், உள்ளிட்ட அடிப்படை பொருட்கள் விலை பெரிய அளவில் உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. அக்டோபர் மாதம் விலைவாசி என்பது 14 மாதங்களில் இல்லாத வகையில் 6.2%ஆக உயர்ந்துள்ளது. உணவுப்பொருட்கள் விலைவாசி கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 10% அதிகரித்துள்ளது. மாதம் 30 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெறும் வருவாய் உள்ள ஒரு குடும்பத்தில் சேமிப்பு என்பது மிக மிக குறைவாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பணவீக்கம் அதிகம் இருப்பதால் மக்கள் வெளியில் சாப்பிடுவதை குறைத்துவிட்டு, வீடுகளிலேயே சாப்பிடுவதும் அதிகரித்துள்ளது. இதனால் பீசா ஹட்,கேஎப்சி உள்ளிட்ட நிறுவனங்களின் விற்பனையும் சரிந்துள்ளது.