ஊழியர்கள் பற்றி சுந்தர் பிச்சை பெருமிதம்..
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட சுந்தர்பிச்சை.. இவரிடம் கூகுள் நிறுவன செயல்பாடுகள் குறித்து டேவிட் ரூபென்ஸ்டெயின் என்பவர் நேர்காணல் நடத்தினார். அதில், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை பங்கேற்று பேசினார். அதில், கூகுள் நிறுவனத்தில் தொழில்நுட்பத்தில் சிறந்தவர்கள் பணியாற்றுவதாகவும், மிகத்திறமையான சூப்பர்ஸ்டார் மென்பொறியாளர்களுக்கான தேடல் தொடர்வதாகவும் கூறினார். மற்ற நிறுவனங்களைப்போல இல்லாமல் கூகுள் நிறுவனம் எங்கே தனித்துவமாக இருக்கிறது என்றும் அவர் விளக்கினார். அதன்படி, கூகுள் நிறுவனத்தின் அலுவலகத்தில் இலவச உணவு வழங்கப்படுவதாகவும், குழுவாக இணைந்து சாப்பிடுவது சமூகத்தில் நல்ல மாற்றத்தை உண்டாக்கும் என்றும், புதுப்புது விஷயங்களை கற்க வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளார். காபி குடிக்கச்செல்லும்போதுதான் புதுப்புது ஐடியாக்கள் கிடைப்பதாகவும் சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
கடந்த ஜூன் மாத இறுதி வரை கூகுள் நிறுவனத்தில் 1.79 லட்சம் பணியாளர்கள் வேலை செய்வதாக கூறிய சுந்தர் பிச்சை. புதுப்புது திறமைகளை ஏற்பதில் கூகுள் நிறுவனத்தின் வெற்றி விகிதம் மிக அதிகமாக இருப்பதாக கூறியுள்ளார். கூகுளில் வேலை பார்ப்பதையே பலரும் கவுரவமாக கருதுவதாகவும் குறிப்பிட்டார். பல டெக் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வேலையை விட்டு அனுப்பி வரும் இந்நிலையில், கூகுள் நிறுவனத்தில் பணி என்பது பெரிய விஷயமாக பணியாளர்கள் கருதுவதாகவும் கூறினார். புதிதாக கூகுள் நிறுவனத்தில் பணிக்கு சேர விரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், தனித்திறமைகள் இருந்தால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்திற்கு வேலைக்கு வர விரும்புவோர் பல்வேறு அம்சங்களை நன்கு கற்றுத் தெரிந்துகொண்டு வரவேண்டும் என்று கூகுள் நிறுவனத்துக்கு பணியாளர்களை செய்து வந்த நோலன் சர்ச் என்பவர் கூறியுள்ளார்.