5 ஆண்டுகளில் 5 லட்சம் பேருக்கு வேலை..
இந்தியாவில் பிரபல நிறுவனங்களில் ஒன்றாக திகழ்வது டாடா குழுமம். இந்த குழுமம் அடுத்த 5 ஆண்டுகளில் உற்பத்தித்துறையில் 5 லட்சம் பேருக்கு வேலை அளிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செமிகண்டக்டர்கள், மின்சார வாகன உற்பத்தி, மற்றும் அது சார்ந்த துறைகளில் இந்த 5 லட்சம் வேலைவாய்ப்புகளை அளிக்க திட்டமிட்டுள்ளதாக அந்த குழுமத்தின் தலைவர் சந்திர சேகரன் கூறியுள்ளார். வளர்ந்த நாடு என்ற இலக்கை எட்டுவதற்கு உற்பத்தித்துறையில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவது கட்டாயம் என்று சந்திர சேகரன் கூறியுள்ளார். டாடா குழுமத்தின் புதிய நிறுவனங்களான செமி கண்டக்டர்களுக்கு என பிரத்யேக ஆலை அசாமில் தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல் மின்சார வாகனங்கள் மற்றும் அது சார்ந்த பேட்டரி உற்பத்தி நிலையங்களையும் டாடா குழுமம் தயாரித்து வருகிறது. இந்த வேலைவாய்ப்புகள் உருவாவதால் சிறு குறு நிறுவனங்கள் என்ற கட்டமைப்பே உருவாகும் என்றும் சந்திரசேகரன் கூறியுள்ளார். இதுபோன்ற முன்னெடுப்புகளுக்கு அரசாங்கம் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்ட சந்திர சேகரன், செமிகண்டக்டர்கள் மூலம் மறைமுகமாக பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் பெருமிதம் தெரிவித்தார். வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப இந்தியாவில் இன்னும் 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தேவைப்படுவதாகவும் சந்திரசேகரன் கூறியுள்ளார்.