இரண்டாக உடைகிறது டாடா மோட்டார்ஸ்..
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் டாடா மோட்டார்ஸ், வணிக பயன்பாட்டுப்பிரிவு மற்றும் பயணிகள் வாகனப்பிரிவு என்று இரண்டாக உடைக்க அந்நிறுவன இயக்குநர்கள் இசைவு தெரிவித்துள்ளனர். நிறுவனத்தின் வளர்ச்சியை அதிகரிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. நிறுவனத்தின் உட்பிரிவை இரண்டாக்குவதால் ஏற்கனவே பங்குகள் வைத்திருப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது. கடந்த 2022-ல் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு இருந்த நிலையில் அதற்கான உத்திகளை அந்நிறுவனம் வகுத்து செயல்படுத்த இத்தனை மாதங்கள் ஆகியுள்ளன. இரண்டாக பிரிக்கப்பட்ட பிறகு., வணிக பயன்பாட்டுவாகனங்கள் மற்றும் அது சார்ந்த முதலீடுகள் தனியாகவும், பயணிகள் வாகனங்கள் எனப்படும் தனிநபர் வாகனங்கள் தனியாகவும், மின்சார கார்கள் தனியாகவும், ஜாக்குவார் மற்றும் லாண்ட் ரோவர் மற்றும் அது சார்ந்த முதலீடுகள் தனியாகவும் நிர்வகிக்கப்படும். தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தின் முடிவுப்படியே இந்த டீமெர்ஜர் எனப்படும் தனியாக பிரிக்கப்படும் முயற்சிகள் நடக்கும் என்று தெரிகிறது. இதன்படி அடுத்த 12 முதல் 15 மாதங்களில் ஒன்றாக இருக்கும் டாடா மோட்டார்ஸ் இரண்டாக பிரியும் சூழல் ஏற்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு முதல் தனித்தனியாக நிறுவனங்கள் இயங்கி வந்தாலும், அதிகாரபூர்வமாக அவை இன்னும் பிரிக்கப்படவில்லை. இப்படி பிரிப்பதால் டாடா மோட்டார்ஸில் எந்த பாதிப்பும் இருக்காது என்று அந்நிறுவனம் அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர். அதிகாரபூர்வமாக பிரிக்கும் இந்த முயற்சி சந்தை மதிப்பை உயர்த்தவும், இலக்கை நோக்கிய சரியான பயணமாக அமையும் என்றும் அந்நிறுவன தலைவர் சந்திர சேகரன் தெரிவித்தார். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 3 ஆவது காலாண்டின் லாபம் 7,100 கோடி ரூபாயாக இருக்கிறது. ஆண்டுக்கு ஆண்டு லாபம் 133 விழுக்காடு அதிகமாகும். வருவாய் 25 விழுக்காடு உயர்ந்து 1.11 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.