இணைகிறதா ஏர்டெல் டாடா பிளே?

இந்தியாவில் வழக்கமான டிவிகளை மக்கள் பார்க்கும் விதமே மாறியுள்ள நிலையில், ஏர்டெல் மற்றும் டாடா பிளே டிடிஎச் சேவைகள் பெரிய இழப்பை சந்தித்து வருகின்றன. இந்த சூழலில் ஏர்டெலும்-டாடா பிளேவும் இணைவதற்கான பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டு நிறுவனத்தில் ஏர்டெலின் பங்கு 50 விழுக்காடாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ரூப்பெர்ட் முர்டாக் நிறுவனத்துடன் இணைந்து டாடா பிளே நிறுவனம் இந்தியாவின் பெரிய டிடிஎச் சேவை வழங்கும் நிறுவனமாக உள்ளது. டாடா பிளேவும்,ஏர்டெலும் இணையும்பட்சத்தில் 1கோடியே 90 லட்சம் டாடா பிளே வாடிக்கையாளர்களின் தரவுகளை ஏர்டெல் பயன்படுத்த முடியும்.
கடந்த 2016 ஆம் ஆண்டு டிஷ்டிவியும்-வீடியோகானும் இணைந்த நிலையில், இரண்டாவது பெரிய இணைவாக இது பார்க்கப்படுகிறது. ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் 52-55 விழுக்காடு வரையும், டாடா பிளேவின் பங்குகள் 45 முதல் 48 விழுக்காடு வரையும் இருக்கும் என்றும், மொத்த மதிப்பு 7 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இரு நிறுவனங்களின் இணைவுக்கும் இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. பணம் கொடுத்து டிவி பார்க்கும் டிடிஎச் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 12 கோடியில் இருந்து 8.4 கோடியாக குறைந்துள்ளது. மக்கள் டிஜிட்டலை நோக்கி சென்றுகொண்டிருக்கும் நிலையில் ஏர்டெல்-டாடா பிளே இணைவு மிகமுக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது.