ஏர் இந்தியாவுக்காக 4 பில்லியன் டாலர் நிதி திரட்டும் டாடா-சன்ஸ்
இந்திய அரசிடம் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் நிறுவனம் கடந்தாண்டு அக்டோபரில் 2.3 பில்லியன் டாலருக்கு வாங்கியது. இந்த நிலையில் ஏர் இந்தியாவுக்காக வாங்கிய கடனை சரி செய்யவும், விமான நிறுவனத்தை நவீனப்படுத்தவும் டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மொத்தமாக 4 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை திரட்ட டாடா குழுமம் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த 4 பில்லியன் டாலர் நிதியை ஈக்விட்டி மற்றும் ஹைப்ரிட் வகையில் திரட்ட டாடா சன்ஸ் திட்டமிட்டு இருக்கிறது..
நிதியை விமான நிறுவனத்துக்குள் கொண்டு வரும் முயற்சியாக நிதி ஆலோசகர்களை டாடா குழுமம் விரைவில் களமிறக்க உள்ளது. இந்தாண்டு ஜனவரியில் நாட்டின் மொத்த சந்தை மதிப்பில் ஏர் இந்தியாவின் சந்தை மதிப்பு 10.21% ஆக உள்ளது.இதேபோல் டாடா நிர்வகிக்கும் மற்ற இரு நிறுவனங்களான விஸ்தாரா மற்றும் ஏர் ஏசியாவின் சந்தை மதிப்பும் முறையே 10.4 மற்றும் 4.6%ஆக உள்ளது. நிதி கிடைக்கும் பட்சத்தில் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களுக்கு ஏ-320 நியோ ஜெட் ரகத்தில் நேரோ பாடி மற்றும் வைட் பாடி விமானங்கள் 200எண்ணிக்கையில் வாங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய விமானங்கள் அடுத்த நிதியாண்டின் தொடக்கத்தில் டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் ஏர் இந்தியா நிறுவனத்தில் 65 வயது வரை விமானிகள் பணியாற்றலாம் என்ற முடிவும் எட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்த்க்கது.