பட்ஜெட்டை அதிகரிக்கும் டாடா..

இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டாடா நிறுவனம் தங்கள் குழுமத்தில் உள்ள நிறுவனங்களுக்கு கூடுதல் மூலதனத்தை ஒதுக்க திட்டமிட்டுள்ளது. குறிப்பாக டாடா டிஜிட்டல், டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களுக்கு அதிக நிதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதி ஒதுக்குவது குறித்து டாடா சன்ஸ் குழும இயக்குநர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் தங்கள் நிறுவனங்களின் 3 ஆம் காலாண்டு முடிவுகள் குறித்தும் ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக டாடா கேபிடலின் 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆரம்ப பங்கு வெளியீடு குறித்தும் விவாதம் நடக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 2027 நிதியாண்டிற்குள் நிறுவனங்களை டாப் 5 இடங்களுக்குள் கொண்டுவரவும், லாபத்தை எட்டவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 62 வயதாகும் சந்திரசேகரன், கடந்த 2017 ஆம் ஆண்டு டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைமை பதவிக்கு வந்தார். பின்னர் 2022 ஆம் ஆண்டு மேலும் 5 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு பெற்றார். கடந்த நிதியாண்டில் 24,000 கோடி ரூபாய் மதிப்புள்ள டிவிடன்ட்களை டாடா குழும நிறுவனங்கள் வழங்கியிருந்தன. குறிப்பாக டிசிஎஸ் நிறுவனம் 19,000 கோடி ரூபாயும், டாடா மோட்டார்ஸ் 2,000 கோடி ரூபாயும், டாடா ஸ்டீல் நிறுவனம் ஆயிரத்து 450 கோடி ரூபாயும் டிவிடன்ட்டாக வழங்கியிருந்தன. டாடா சன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 9.4 விழுக்காடு உயர்ந்து 86,500 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. 2022-24 காலகட்டத்தில் மட்டும் டாடா குழுமத்தின் வணிகம் 6.7லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. போட்டி நிறைந்த பணி சூழலை உருவாக்கும் டாடாவுக்கு ஏஐ உள்ளிட்ட சில தொழில்நுட்பங்கள் பெரிய சவாலாக உள்ளன