டிசிஎஸ் ஊழியர்களுக்கு 8% சம்பள உயர்வு அளிக்க திட்டம்..

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸில் ஊழியர்களுக்கு ஆண்டு சம்பள உயர்வு 4 முதல் 8 விழுக்காடாக உயர்த்தி அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 2025-26 நிதியாண்டில் இந்த சம்பள உயர்வு அமலாக இருக்கிறது. சம்பள உயர்வு மட்டுமின்றி வேரியபிள் பே எனப்படும் கூடுதல் சலுகைகளும் டிசிஎஸ் ஊழியர்களுக்கு கிடைக்க இருக்கிறது. கடந்தாண்டு அலுவலகத்துக்கு திரும்ப வேண்டும் என்ற அறிவிப்பை ஊழியர்களுக்கு அந்த நிறுவனம் அறிவித்ததை அடுத்து சம்பளத்துடன் கூடிய கூடுதல் சலுகைகளும் கிடைக்க இருக்கின்றன. சில ஊழியர்கள் சிறப்பாக செயல்பட்டால் அவர்களுக்கு 8 விழுக்காடுக்கும் அதிகமான சம்பளம் அளிக்கவும் டிசிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் சிறப்பாக செயல்பட்ட பணியாளர்களுக்கு qvp எனப்படும் காலாண்டு ஊக்கத் தொகையும் கிடைக்க வாய்ப்புள்ளது. மூத்த நிர்வாகிகளுக்கு சம்பளத்தில் 20 முதல் 40 விழுக்காடு வரை குறைந்த அளவே கிடைக்கிறதாம். இந்தியாவில் டிசிஎஸ், இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பது குறித்து பேசியுள்ளனர். மார்ச் மாதம் இன்போசிஸில் சம்பள உயர்வு கடிதம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்போசிஸ் நிறுவனத்திலும் சம்பள உயர்வு 5முதல் 8% இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப சந்தை 254 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்டது. ஒரு காலகட்டத்தில் சிறப்பாக இருந்த இந்திய ஐடிதுறை, படிப்படியாக குறைந்து இரட்டை இலக்கத்தில் இருந்து குறைந்து தற்போது மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. கொரோனா பெருந்தொற்று நேரத்தில் இரட்டை இலக்கத்தில் இருந்த இந்திய ஐடி துறையின் வளர்ச்சி தற்போது ஒற்றை இலக்கத்தை எட்டியுள்ளது.