திரும்பி வந்துட்டேன்னு சொல்லு..
கடந்த 2021-ல் போதிய விற்பனை இல்லாமல் நாட்டை விட்டே வெளியேறப்போவதாக ஃபோர்ட் நிறுவனம் அறிவித்திருந்தது. கடந்த 2022-ஆம் ஆண்டு சென்னை மறைமலைநகர் அருகே உள்ள ஃபோர்டு ஆலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் அந்த நிறுவன பணியாளர்கள் வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்காவுக்கு சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அங்குள்ள ஃபோர்ட் நிறுவன அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசினார். அதில் மீண்டும் ஃபோர்ட் நிறுவனம் தமிழ்நாட்டுக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை ஃபோர்டு நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மீண்டும் சென்னையில் உள்ள ஃபோர்டு ஆலை செயல்பாட்டுக்கு வருவது குறித்து ஆலோசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் 12ஆயிரம் பேர் இருக்கின்றனர். இந்நிலையில் அடுத்த 3 ஆண்டுகளில் மேலும் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தவும் ஃபோர்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருக்கும் ஃபோர்டு ஆலையை விற்க அந்த நிறுவனம் மறந்துவிட்டது. அதே நேரம் குஜராத்தில் உள்ள ஆலையை டாடா நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. ஃபோர்டு வெளியேற நிலையில் வெளிநாட்டு நிறுவனங்களான கியா மற்றும் எம்ஜி நிறுவனங்கள் இந்தியாவில் குறுகிய காலகட்டத்தில் மிகப்பிரபலமடைந்துவிட்டன. சீனா மற்றும் ஐரோப்பாவில் வணிகம் சரிவடைந்துள்ள அதே நேரம் இந்தியாவில் வளர்ச்சி இருக்கிறது. ஏற்கனவே மின்சார கார்களை அறிமுகப்படுத்தும் திட்டம் ஃபோர்ட் நிறுவனத்திடம் இருந்த நிலையில் தற்போது அந்த திட்டம் மீண்டும் தூசி தட்டி எழுப்பப்படுமா என்பதை காத்திருந்து தான் தெரிந்துகொள்ள வேண்டும்..