ஹல்திராம்ஸை வாங்க முயற்சிக்கும் டெமாசெக்..
சிங்கப்பூரைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான டெமாசெக் ஹோல்டிங்க்ஸ், ஹல்திராம் ஸ்னாக்ஸ் நிறுவனத்தின் பங்குகளை சிறு பகுதி வாங்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹல்திராம் நிறுவனத்தின் தற்போதை மதிப்பு 11 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. 15 விழுக்காடு வரை ஹல்திராம் பங்குகளை வாங்க டெமாசெக் பேசி வருவதாக கூறப்படுகிறது. சிங்கப்பூர் நிறுவனம் மட்டுமின்றி மேலும் சில நிறுவனங்களிடமும் ஹல்திராம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. கங்கா பிஷன் அகர்வால் என்பவரால் 1930-ல் தொடங்கப்பட்டதாக கூறப்படும் ஹல்திராம் நிறுவனம், இனிப்பு மற்றும் கார வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பிரெட்களை விற்பனை செய்து வருகிறது. டெல்லியில் இந்த நிறுவனம் 43 உணவகங்களையும் நடத்தி வருகிறது. ஆரம்ப பங்கு வெளியிடவும் அந்த நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய நிறுவனங்கள் மீது முதலீடு செய்ய பல வெளிநாட்டு நிறுவனங்கள் முயற்சித்து வரும் நிலையில், ஹல்திராம் நிறுவனம் மிகமுக்கிய கவனம் பெற்றுள்ளது. டெமாசெக் நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே 37 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு கடந்த 20 ஆண்டுகளாக முதலீடுகள் செய்து வருகிறது. இந்திய நிறுவனங்கள் வளர வேண்டும் என்பதற்காகவே முதலீடுகளை செய்து வருவதாக சிங்கப்பூர் நிறுவனம் கூறியுள்ளது.