டெஸ்லாவுக்கு தனி பாலிசி நஹி…
டெஸ்லாவுக்கு மட்டும் தனியாக ஒரு கொள்கையை வடிவமைக்கவில்லை என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்தியா வகுக்கும் திட்டங்கள் அனைத்து மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கும் பொதுவாகவே உள்ளதாகவே அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள கொள்கையின்படி 40 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான தொகையுள்ள கார்களுக்கு 100 விழுக்காடு அதிக சுங்க வரி விதிக்கப்படுகிறது. அதற்கும் குறைவான கார்களுக்கு 70 விழுக்காடு வசூலிக்கப்படுகிறது. தனியார் செய்தி முகமைக்கு பேட்டியளித்த பியூஷ் கோயல் போதுமான மின்சார கார்கள் உருவாகும் திட்டத்தை ஊக்கப்படுத்த தேவையான நடவடிக்கைகளை செய்து வருவதாக கூறியுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் அளவை பேட்டரி வாகனங்களின் வருகை குறைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதற்காக ஒரு தனிப்பட்ட நிறுவனத்துக்காக கொள்கைகளை மாற்ற முடியாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். ஐரோப்பா, அமெரிக்கா , ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளில் இருந்து முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அந்தந்த நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகங்களிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கோயல் குறிப்பிட்டார்.
இந்தியா விதிக்கும் நிபந்தனைகளுக்கு வெளிநாட்டு மின்சார கார் தயாரிப்பு நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
டெஸ்லா இந்தியாவில் உற்பத்தியை தொடங்கினால் டெஸ்லாவின் 6 ஆவது பெரிய ஃபேக்டரியாக இருக்கும் என்று குறிப்பிட்ட கோயல்,உலகின் பெரிய மின்சார கார் தயாரிப்பு நிறுவனமாக டெஸ்லா திகழும் நிலையில் அந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், கடந்தாண்டு ஜுன் மாதத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
சீனாவிக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள மோதல் அதிகரித்துள்ள நிலையில் சீனாவுக்கு மாற்றாக இந்தியா உருவெடுத்து வருகிறது. அமெரிக்காவைப் போலவே பிரிட்டனும் இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்பார்த்துள்ளது. அதன்படி மின்சார வாகன ஏற்றுமதியில் அவர்களும் வரிசலுகையை இந்தியாவிடம் இருந்து எதிர்பார்க்கின்றனர். பிரிட்டனில் 2035 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வாகனங்களும் மின்சாரவாகனங்களாக மாற்றும் திட்டம் உள்ளது. பிரிட்டனில் இருந்து கார்கள் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதற்கு பதிலாக தற்போது வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியை செய்ய அந்நாடு திட்டமிட்டு வருகிறது. 2022-ல் மட்டும் 10 லட்சம் மின்சார வாகனங்கள் இந்தியாவில் விற்கப்பட்டுள்ளன. இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முன்னணியில் உள்ளது. அந்நிறுவனத்தில் மட்டும் நெக்சான், டியாகோ,டிகோர் ஆகிய மின்சார கார்கள் சந்தையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.