இந்தியாவில் பணியை தொடங்கிய டெஸ்லா..

உலகிலேயே மின்சார கார் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் டெஸ்லா, இந்த நிறுவனம் இந்தியாவில் அதிக வரி விதிப்பால் தனது கிளையை இந்தியாவில் தொடங்கவில்லை. பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, அண்மையில்தான் டெஸ்லாவுக்கும், இந்திய அரசுக்கும் இடையே டீல் முடிந்ததாக கூறப்படுகிறது. இதனை உறுதிபடுத்தும் வகையில் அண்மையில் அமெரிக்காவுக்கு சென்ற பிரதமர் மோடியை டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் நேரில் சந்தித்து நீண்ட ஆலோசனை நடத்தினார். அமெரிக்காவில் இருந்து மோடி நாடு திரும்பிய அடுத்த சில நாட்களுக்குள்ளேயே எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் தனது லிங்க்டு இன் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வாடிக்கையாளர் சேவைப்பிரிவு உள்ளிட்ட 13 வேலைகளுக்கு ஆட்கள் தேவை என்று கூறியிருக்கிறது. அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள 13 வேலைகளில் 5 வேலைகள் தொழில்நுட்ப ரீதியிலானது. சில சேவை பிரிவை சேர்ந்ததாக உள்ளது. மும்பை மற்றும் டெல்லியில் பணியாற்றும் வகையில் டெஸ்லா தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதிக இறக்குமதி வரி உள்ளிட்ட காரணிகளால் இந்தியாவிற்குள் கார் உற்பத்தியை தொடங்க டெஸ்லா முடிவெடுத்தது. தற்போது பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு டெஸ்லா நிறுவன கார்களுக்கான வரியாக 40 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு மேல் உள்ள கார்களுக்கு 110-ல் இருந்து 70 விழுக்காடாக வரி குறைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக பசுமை இல்ல வாயுக்களான சுற்றுச்சூழலை பாதிக்கும் வாயுக்களை வெளியேற்றுவதில் இந்தியாவுக்கு 3 ஆவது இடம் கிடைத்துள்ளது. இதனை முற்றிலும் 0 ஆக்க 2070 ஆண்டு வரை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, மின்சார கார்களை நோக்கி இந்தியா பயணித்து வருகிறது. 500 மில்லியன் அமெரிக்க டாலருக்கு முதலீடு செய்யும் மின்சார கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு இறக்குமதி வரியை கடந்த மார்ச்சில் இந்திய அரசு குறைத்தது குறிப்பிடத்தக்கது.