மும்பையில் முதல் ஷோரூம் திறக்கும் டெஸ்லா..

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவின் மும்பையில் தனது முதல் ஷோரூமை திறப்பதை உறுதி செய்துள்ளது. மும்பையின் பாந்த்ரா குர்லா காம்பிளக்ஸ் பகுதியில் இந்த புதிய ஷோரூம் திறக்கப்பட இருக்கிறது. இந்த ஷோரூம் 4,000 சதுரடி இடம் கொண்டது. ஒரு சதுரடிக்கு 900 ரூபாய் அதாவது மாத வாடகையாக 35 லட்சம் ரூபாயை டெஸ்லா நிறுவனம் தர இருக்கிறது. இந்த இடத்துக்கு 5 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் டெல்லியின் ஏரோசிட்டி பகுதியில் இரண்டாவது ஷோரூம் திறக்கும் பணிகளும் தீவிரமடைந்துதுள்ளன. இந்திய பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு சென்று திரும்பிய இரண்டே வாரங்களில் டெஸ்லா நிறுவனம் தனது ஷோரூமை இந்தியாவில் திறக்கிறது. விண்வெளி, போக்குவரத்து, தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை விவாதித்ததாக பிரதமர் மோடி மஸ்குடனான சந்திப்புக்கு பிறகு டிவீட் செய்திருந்தார். இந்தியாவில் காரை தயாரிக்காமல், ஜெர்மனியின் பெர்லின் நகரில் உற்பத்தியாகும் காரை இந்தியாவில் விற்க டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் 25,000 அமெரிக்க டாலருக்கும் குறைவான தொகையில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் டெஸ்லா3 மாடல் கார்கள்தான் மிகவும் விலை குறைவான கார்களாகும். இந்தியாவில் கார்கள் உற்பத்தி குறித்து அந்நிறுவனம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றபோதும், உதிரிபாகங்களை இந்தியாவில் தயாரிக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.