ஹல்திராமை வாங்கும் டீல் கிட்டத்தட்ட ஓவர்..

இந்தியாவின் முன்னணி ஸ்நாக்ஸ் உற்பத்தியாளரான ஹல்திராமின் பங்குகளை வாங்க பெரிய நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டோ போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் பிளாக்ஸ்டோன் நிறுவனத்தின் தலைமையிலான குழு இதில் அதீத ஆர்வம் காட்டி வருகிறது. மாதக்கணக்கில் நடந்த தொடர் பேச்சுவார்த்தையின் விளைவாகவே இந்த டீல் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. பிளாக்ஸ்டோன், சிங்கப்பூரைச் சேர்ந்த ஜிஐசி, அபுதாபி வளர்ச்சி ஆணையம் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து 1.6 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஹல்திராமின் 20 விழுக்காடு பங்கை வாங்க இசைவு எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த டீலின் மொத்த மதிப்பு 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் வாரங்களில் இது தொடர்பான ஒப்பந்தம் இறுதி வடிவம் பெறும் என்றும் கூறப்படுகிறது. கங்கா பிஷன் அகர்வால் என்பவரால் 1930 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஹல்திராம், இனிப்பு மற்றும் கார வகைகளுடன், உறையவைத்த இறைச்சி மற்றும் பிரட்களையும் விற்று வந்தது. தற்போது டெல்லி முழுவதும் 43 உணவகங்களை நடத்தி வருகிறது. பல்வேறு தரப்பினரிடம் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாமல் இருந்த நிலையில் தற்போது ஒரு வழியாக டீல் முடிந்ததாக கூறப்படுகிறது. சிங்கப்பூரைச் சேர்ந்த டெமாசெக் உள்ளிட்ட நிறுவனங்களும் ஹல்திராமை வாங்க ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.