நின்றுபோனது சோனி-ஜீ இணைப்பு..
பிரபல பொழுபோக்குத்துறை நிறுவனமான சோனி நிறுவனம் ஜீ என்டர்டெயின்மண்ட் நிறுவனத்துடனான இணைப்பை ரத்து செய்வதாக திங்கட்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொண்ட மெகா இணைப்புத்திட்டமாக இருந்த இந்த இணைப்பு பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் ஜவ்வாக இழுக்கப்பட்டு வந்தது. உலகளவில் பிரபலமான நெட்பிளிக்ஸ், அமேசான் ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியாக களமிறங்க சோனியும்-ஜீ நிறுவனமும் இணைய பணிகள் நடந்து வந்தன. ஒரு பக்கம் டிஸ்னியும்-ரிலையன்சும் இணையும் சூழலில், மற்றொரு பக்கம் சோனி-ஜி பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஜீ நிறுவனத்தின் தலைமைபதவியில் இருந்த புனித் கோயன்காவை கூட்டு நிறுவனத்தின் தலைமை பதவியில் இருந்து நீக்க எதிர்ப்பு எழுந்ததால் இந்த இணைப்பு தள்ளிப்போனது. 2021-ல் கையெழுத்திடப்பட்ட சோனி-ஜீ இணைப்பு, 2 ஆண்டுகள் இழுபறிக்கு பிறகு தற்போது பாதகமாக முடிந்துவிட்டது. புனித் கோயன்கா மீது உள்ள புகார்களை விசாரணை நடந்து வந்த நிலையில், இந்த டீல் டமாலாகிவிட்டது. இணைப்பு இல்லை என்ற போதிலும் சுமூக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜீ நிறுவனத்துக்கும்-சோனி நிறுவனத்துக்கும் முக்கியமான இந்த டீல் முடியாததால் இருவருக்கும் மிகப்பெரிய கெட்டபெயர் சந்தையில் ஏற்பட்டுள்ளது. புனித் கோயன்காவுக்கு பதிலாக என்பி சிங் என்பவர் கூட்டு நிறுவன தலைமைப்பொறுப்பில் இருக்க சோனி நிறுவனம் விரும்பியதாக கூறப்படுகிறது. இணைப்பு இல்லை என்பதால் சோனி நிறுவனம் தனித்தே இந்திய சந்தையில் களமாட இருக்கிறது.