சிறிய நிறுவனங்களை பதம் பார்த்த பங்குச் சந்தை வீழ்ச்சி..
கடந்த சில வாரங்களாக தொடர் ஏறு முகத்தில் இருந்த இந்திய பங்குச் சந்தைகள் இப்போது சரிவை சந்தித்திருக்கின்றன. குறிப்பாக 200க்கும் மேற்பட்ட சிறிய நிறுவனங்களின் பங்குகள் சுமார் 40 சதவீதம் வரை வீழ்ச்சியை கண்டுள்ளன. தேசிய பங்குச் சந்தையில் ஊடகம், ரியல் எஸ்டேட், பொதுத்துறை வங்கிகள், மற்றும் உணவுத்துறை பங்குகள் பெரிய வீழ்ச்சி சந்தித்துள்ளன. அதே நேரம் டெக் நிறுவன பங்குகளின் மதிப்பு ஒரு விழுக்காடு வரை உயர்ந்திருக்கிறது. கடந்த சில வாரங்களில் 816 கோடி ரூபாய் அளவுக்கான பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்பனை செய்துள்ளனர் அதே நேரம் உள்ளூர் முதலீட்டாளர்கள் சந்தையை வலுப்படுத்தும் விதமாக 14,000 கோடி ரூபாய் அளவுக்கான முதலீடுகளை இந்தியாவில் செய்துள்ளனர். கடந்த டிசம்பர் 2022க்குப் பிறகு மார்ச் 15 ஆம் தேதி தான் மிகப்பெரிய சரிவை இந்திய பங்குச்சந்தைகள் சந்தித்தன. குறிப்பாக ஆறு விழுக்காடு வரை சரிவை இந்திய பங்கு சந்தைகள் எதிர்கொண்டன. ஒரு பக்கம் சிறிய நிறுவனங்கள் பெரிய சரிவை சந்தித்துள்ள நிலையில், ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பூனாவாளா உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்தை சந்தித்துள்ளன. நடப்பு நிதி ஆண்டில் கடைசி சில நாட்களில் இதே நிலை நீடிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.