மீண்டெழுந்த பங்குச்சந்தைகள் காரணம் இதுதான்..
கடந்த புதன்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 80 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. இதில் கவனிக்க வேண்டிய அம்சம் யாதெனில் தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் நல்ல முன்னேற்றம் கண்டன. கடந்த டிசம்பர் 18 ஆம் தேதிக்கு பிறகு முதல் முறையாக மும்பை பங்குச்சந்தை 80 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. அதே நேரம் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 161 புள்ளிகள் உயர்ந்து 24 ஆயிரத்து 328 புள்ளிகளாக வணிகம் முடிந்தது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பாவெல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியது மற்றும் சீனாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது ஆகிய காரணிகளே இந்திய பங்குச்சந்தைகள் உயர காரணமாக அமைந்தது. இது மட்டுமின்றி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் 3,323 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை வாங்கினர். ஐடி நிறுவன பங்குகள் குறிப்பாக எச்.சி.எல் நிறுவன பங்குகள் 7 விழுக்காடு வரை விலை ஏற்றம் கண்டன. இதற்கு அடுத்தபடியாக டெக் மஹிந்திரா, விப்ரோ, இன்போசிஸ்,டிசிஎஸ் நிறுவன பங்குகளும் கணிசமாக உயர்ந்தன. கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி 21,743 புள்ளிகளாக சரிந்த பங்குச்சந்தைகள் அண்மையில் 24,328 என்ற நிலையை எட்டின. வரும் நாட்களிலும் இந்திய சந்தைகளில் ஏற்றம் காணப்படும் என்று கூறும் நிபுணர்கள், கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டு முடிவுகள் வெளியாகி வருவதால் அதுவே சந்தையின் போக்கை தீர்மானிக்கும் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.
