23%சரிந்த லாபம்..
பிரபல வாட்ச் மற்றும் மூக்குக் கண்ணாடி தயாரிக்கும் டாடவின் கூட்டு நிறுவனமான டைட்டனின் இரண்டாம் காலாண்டு லாபம் 23.1விழுக்காடு சரிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதான காரணமாக சுங்க வரி குறைக்கப்பட்டது கூறப்படுகிறது. வணிகத்தால் வருவாய் 25.8 விழுக்காடு அதிகரித்து 13,473 கோடி ரூபாயாக உள்ளதாகவும், இது கடந்தாண்டைவிட அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது. டைட்டன் கம்பெனியின் தற்போதைய லாபம் 704 கோடி ரூபாயாக உள்ளது. தனிஷ்க் உள்ளிட்ட நகைக் கடைகளையும் டைட்டன் நிறுவனம் நிர்வகிக்கிறது. தனிஷ்க் நிறுவனத்தின் நகை வணிகம் 26 விழுக்காடு உயர்ந்து 10,763 கோடி ரூபாய்க்கு வணிகம் நடந்துள்ளது. இது கடந்த காலாண்டைவிட மிகவும் அதிகமாகும். இரண்டாவது காலாண்டில் மட்டும் தனிஷ்க் நிறுவனம் இந்தியாவில் 11 புதிய கிளைகளை தொடங்கியுள்ளது. இதே போல் மியா நிறுவன கடைகள் 12, சோயா நிறுவனத்தின் ஒரு கிளை திறக்கப்பட்டுள்ளன. 1301 கோடி ரூபாய் மதிப்புள்ள வருவாய் இந்த காலகட்டத்தில் வாட்ச் மற்றும் ஆபரணங்கள் விற்பனை மூலம் கிடைத்துள்ளன. உள்நாட்டு விற்பனை இதே காலகட்டத்தில் 19 விழுக்காடு உயர்ந்துள்ளது. டிஜிட்டல் வாட்ச் இல்லாமல் அனலாக் வாட்ச்களின் விற்பனை கடந்தாண்டில் 25 விழுக்காடு உயர்ந்துள்ளதாக அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது லாபம் சரிந்தாலும் வரும் நாட்களில் பிடித்துவிடலாம் என்று டைட்டன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.கே. வெங்கட்ராமன் கூறியுள்ளார்.