இந்தியாவுக்கு சற்று நிம்மதி அளித்த டிரம்ப்..

அமெரிக்காவை இன்னும் சிறப்பாக்குவேன் என்று கூறி அதிபராக பதவியேற்றவர் டிரம்ப். இவர் பல நாடுகள் மீது பதிலுக்கு பதில் வரி விதித்து அதிர்ச்சியடைச் செய்துள்ளார். இந்த புதிய பதில் வரி வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் அமலாகும் என்றும் பல அதிரடிகளை செய்திருந்தார். இந்த நிலையில் அந்நாட்டு கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அனைத்து பொருட்களுக்கும் பதில் வரி இல்லை என்றும், குறிப்பிட்ட சில பொருட்களுக்கு மட்டுமே வரி விதிக்கும் வகையில் பணிகள் நடந்து வருவதாகவும் கூறியிருக்கிறார்.
இந்த பதில் வரியால் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பதில் வரி விதிக்கும் திட்டத்துக்கான பணிகள் முடிய தாமதம் ஆகும் என்று ஸ்காட் கூறியுள்ளதால் இந்தியாவுக்கு சற்று ஆறுதல் கிடைத்துள்ளது. ஸ்காட் கூறியுள்ள கருத்துக்கு வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவரோ நேர் எதிர் கருத்துகளை தெரிவித்துள்ளார். பதில் வரி அமல்படுத்தும் முன்பு சில நாடுகள் பேச்சுவார்த்தைக்கு வர வாய்ப்புள்ளதாகவும் ஸ்காட் குறிப்பிட்டார். பதில் வரி அமலாக காலதாமதம் ஆகலாம் என்றும் மற்றொரு தரப்பினர் கூறியுள்ளனர். பதில் வரி விதிப்பதில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருப்பதாகவும், 17ஆயிரம் பொருட்களுக்கு தற்போது 186 நாடுகளிடம் இருந்து அமெரிக்கா வரி சார்ந்த பணிகளை செய்திருப்பதாகவும், இதனை கணக்கிடுவதில் சிக்கல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இடியாப்ப சிக்கல் போல வரி விதிப்பதற்கு பதிலாக 10 அல்லது 20 விழுக்காடு வரி என்ற பொதுவான அனுகுமுறையை பின்பற்றவும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். செயற்கை நுண்ணறிவு மூலம் 186 நாடுகளின் வரி விதிப்பு முறைக்கு தீர்வு காண திட்டமிடப்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.