ஜிஎஸ்டி கவுன்சிலில் வரப்போகும் மாற்றம்..
கட்டுமானத்துறையில் உள்ள பிரச்னைகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பாக ரெரா(rera) திகழ்கிறது. இந்த அமைப்பின் கோரிக்கையை ஏற்று, ஜிஎஸ்டி கவுன்சிலில் சில மாறுதல்கள் செய்யப்பட உள்ளன. அதாவது ரெரா அமைப்பு ஜிஎஸ்டி செலுத்தத் தேவையில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட இந்த அமைப்பு அனைத்து தரப்பு இடங்களிலும் இயங்கி வருகிறது. ஜிஎஸ்டி அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ரியல் எஸ்டேட் துறையில் உள்ள ரெரா அமைப்பின் கீழ் உள்ள நிறுவனங்கள் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு பெற தகுதியானவை என்று தகவல் கசிந்திருக்கிறது. ஆனால் இது இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. rera அமைப்பிற்கு பல்வேறு மாநில அரசாங்கங்கள் நிதி ஒதுக்கி இருப்பதால் , மாநில அரசுக்கே ஜிஎஸ்டி போடுவதற்கு சமமாகிவிடும் என்ற கருத்தும் உள்ளது. ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட இருக்கிறது. இந்த அறிவிப்புக்கு முன்னதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான குழு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது பற்றி விவாதித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கடந்தாண்டு அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெற்றது. கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி தரவுகளின்படி சில அரசுத்துறை நிறுவனங்கள், அரசு நிதி பெறும் நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரம்பில் வராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாகவே ரெராவும் இதே கோரிக்கையை முன்வைத்திருக்கிறது. ஜிஎஸ்டி வரம்பிற்குள் சில சேவைகள் வராதபட்சத்தில் வீடு கட்டுபவர்கள் மற்றும் வீடு வாங்குவோருக்கும் நிம்மதி ஏற்படும் என்று துறை சார்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.