மீண்டும் எழுந்த யுபிஐ கட்டண சர்ச்சை..
இந்தியாவில் போன்பே மற்றும் கூகுள் பே நிறுவனத்தின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அதன் பயன்பாட்டுக்கு வணிகர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பார்களா என்ற விவாதம் எழுந்துள்ளது.
நிதிநுட்ப நிறுவனங்கள் யுபிஐ பயன்பாட்டுக்கு தனி கட்டணம் வசூலிக்க மத்திய அரசை கேட்டு வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து தங்கள் வங்கிக்கணக்குக்கு யுபிஐ மூலம் பணம் மாற்றப்படுவதால் தங்களுக்கு எந்த லாபமும் இல்லை என்று நிதிநுட்ப நிறுவனங்கள் மத்திய நிதியமைச்சகத்திடமும் முறையிட்டு உள்ளனராம். எத்தனை முறை கேட்டாலும் எந்த பதிலும் அரசு தரப்பில் இருந்து தங்களுக்கு சாதகமாக வரவில்லை என்று நிதிநுட்ப நிறுவனங்களும்,வணிகர்களும் புலம்பாமல் இல்லை. யுபிஐ பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலித்தால் சிறுநிறுவனங்கள் வளரும் என்றும் அந்த பரிவர்த்தனை கட்டமைப்பு ஆரோக்கியமாக இருக்கும் என்றும் வணிகர்கள் தெரிவிக்கின்றனர். இது பற்றி அரசு தரப்பில் தெளிவான விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை. இந்தியாவில் பயன்படுத்தப்படும் 80 விழுக்காடு பயன்பாடு கூகுள் பே மற்றும் போன் பேவின் அம்சங்களாக உள்ளன. அண்மையில் ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளுக்கு ஆளான பேடிஎம் பயன்பாடு 140கோடியில் இருந்து 130 கோடி பரிவர்த்தனைகளாக குறைந்திருக்கிறது.
கிரிடிட் கார்டுகளுக்கு mdrஎன்ற கட்டணம் வசூலிப்பது போல யுபிஐ முறைக்கும் MDRகட்டணம் வசூலிக்க வேண்டும் என்று வணிகர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு வேளை கட்டணம் வசூலிப்பார்களோ என்று வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சமும் எழாமல் இல்லை.