ரூபே கிரிடிட் கார்டு பயன்பாடு இரட்டிப்பு..
யுபிஐ பணப்பரிவர்த்தனை முறை என்பது இந்தியாவில் வெற்றிகரமான திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ரூபே கிரிடிட் கார்டுகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்வது இந்த நிதியாண்டின் முதல் 7 மாதங்களில் இரட்டிப்பாகியுள்ளதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, ரூபே கிரிடிட் கார்டுகளை பயன்படுத்தி ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரை 91 விழுக்காடு பரிவர்த்தனைகள், 334 பில்லியன் ரூபாய் மதிப்பில் செய்யப்பட்டுள்ளன என்றார். பரிவர்த்தனை அடிப்படையில் 106விழுக்காடு இது அதிகமாகும். ரூபே நிறுவன கிரிடிட் கார்டுகள் மூலம் பணத்தை பரிவர்த்தனை செய்யும் முறையைகடந்த 2022 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸால் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் யுபிஐ பயன்பாடு கடந்த நவம்பரில் 15.48 பில்லியன் என்ற அளவில் இருந்தது. இது ஆண்டுக்கு ஆண்டு 38 விழுக்காடு வளர்ச்சியாகும். கடந்தாண்டு நவம்பரில் இருந்ததை விட இந்தாண்டு நவம்பரில் இந்தியாவில் யுபிஐ பயன்படுத்துவோர் எண்ணிக்கை 24 விழுக்காடு உயர்ந்து 21.55லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஒருநாளில் 516 மில்லியன் பரிவர்த்தனை யுபிஐ மூலம் நடக்கிறது. அதாவது 71,840 கோடி ரூபாய் பணத்தை யுபிஐ மூலம் மக்கள் அனுப்பி வருகின்றனர். கடந்த 2016 ஏப்ரலில் யுபிஐ அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், கடந்த அக்டோபரில்தான் இதன் பயன்பாடு உச்சம் தொட்டது. 16.58 பில்லியன் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டன. இதன் மதிப்பு 23.5லட்சம் கோடி ரூபாயாகும்.