கடினமான தருணத்துக்கு தயாராகும் அமெரிக்க பங்குச்சந்தைகள்….
அமெரிக்காவில் விலைவாசி உயர்வும், வேலைவாய்ப்பின்மையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் அதிரடி கட்டுப்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அனைத்து வகையான கடன்களின் விகிதங்களும் கடுமையாக உயர இருக்கிறது. இந்த சூழலில் மக்களையும், பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களையும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க பெடரல் ரிசர்வின் தலைவர் ஜெரோம் பாவல் தெரிவித்துள்ளார். நூறு அடிப்படை புள்ளிகளை உயர்த்துவதற்கு பதிலாக 75 புள்ளிகள் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அந்நாட்டில் விலைவாசி உயர்வு 8% அல்லது அதற்கும் மேல் உள்ளது.ஆனால் வேலைவாய்ப்பின்மை சற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகையிலான கலவையான விகிதங்கள் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு அமெரிக்காவில் தற்போதுதான் நிலவுகிறது. பொருளாதார மந்தநிலையை கட்டுக்குள் கொண்டுவர அமெரிக்க பெடரல் ரிசர்வ் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த ஜூலை மாதம் பெடரல் ரிசர்வின் அறிவிப்புகளால் அமெரிக்க பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன.இந்நிலையில் தற்போதைய விலையேற்றத்தை கருத்தில்கொண்டு பங்குகளில் கவனத்துடன் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் திட்டமிட்டுள்ளதால் அமெரிக்க பங்குச்சந்தைகளில் பெரிய அளவு சரிவு ஏற்படவும், ஆனால் விரைவில் சரியாகிவிடும் வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது. விலைவாசி உயர்வை 2 % குறைக்க வேண்டும் என்பதே அமெரிக்க ரிசர்வின் நோக்கமாக உள்ளதால் அமெரிக்க பங்குச்சந்தை வீழ்ச்சியும் பொருளாதார மந்த நிலையும் நிச்சயம் இருக்கும் என்றும், பின்னர் சரியாகிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது