“மகாராஷ்டிராவில் ஐபோன்களை தயாரிக்கிறது வேதாந்தா நிறுவனம்”
இந்தியாவில் மின்சாதன பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் வேதாந்தா நிறுவனம் மகாராஷ்டிராவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை உற்பத்தி செய்ய உள்ளதாக வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் சிஎன்பிசி டிவி 18 நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சுரங்கத்துறையில் கொடிகட்டி பறக்கும் வேதாந்தா நிறுவனம் மின்சார வாகன உற்பத்தியிலும் களம்காண உள்ளது.
இந்தியாவில் ஐபோன் தயாரிப்பதற்காக தைவான் நிறுவனமான விஸ்ட்ரானுடன் இணைந்து டாடா குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில் வேதாந்தா நிறுவனமும் ஐபோன்களை தயாரிக்க ஆர்வம் காட்டி வருகிறது.
சீனாவில் இருந்து படிப்படியாக வெளியேற ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதால் இந்த வாய்ப்பு இந்திய நிறுவனங்களுக்கு கிடைக்க உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து செமிகண்டெக்டர் எனப்படும் அரைகடத்திகளை உற்பத்தி செய்வதில் வேதாந்தா நிறுவனம் தீவிரம் செலுத்தி வருகிறது. இதற்காக 1 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பாக்ஸ்கான் மற்றும் வேதாந்தா நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன.
வேதாந்தாவும் பாக்ஸ்கான் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கூட்டு நிறுவனத்தில் வேதாந்தாவின் பங்கு 60 விழுக்காடும், பாக்ஸ்கான் நிறுவனத்தின் பங்கு 40 விழுக்காடும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.