ஃபோக்ஸ்வாகன் கேஸ் புதிய அப்டேட்..

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வாகன் 1.4பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள வரியை ஏய்ப்பு செய்ததாக நடந்து வரும் வழக்கில், மத்திய அரசு கோர்ட்டில் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. அதில் இந்த விவகாரத்தில் 1.4பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரியை இழந்துவிட்டால் இது மிகப்பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கூறப்படும் இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி பல வெளிநாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் முதலீடு செய்ய தயங்கி வருகின்றனர். மும்பையில் உள்ள உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு , ஃபோக்ஸ் வாகன் நிறுவனத்துக்கு இந்தியாவில், வாழ்வா, சாவா என்ற நிலையில் உள்ளது. ஆவ்டி, ஃபோக்ஸ்வாகன், ஸ்கோடா கார்களின் உதிரி பாகங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து அதற்கு உண்டான இறக்குமதி வரியை ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் மறைக்கிறது என்பதே பிரதான புகாராகும். சட்டவிரோதமாக பொருட்கள் எடுத்துவந்ததை ஃபோக்ஸ்வாகன் மறைப்பதாகவும் 78 பக்க குற்றச்சாட்டை இந்திய வரித்துறை அதிகாரிகள் முன்வைத்துள்ளனர். இந்த ஒரு முறை ஃபோக்ஸ்வாகனை விட்டுவிட்டால், மற்ற கார் நிறுவனங்களும் முக்கியமான ஆவணங்களை மறைக்க வாய்ப்புள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஃபோக்ஸ்வாகன் தனது தவறை ஒப்புக்கொண்டால் 2.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது. வெளிநாட்டு கார் நிறுவனங்களுக்கு சலுகைகள் அளிக்கும் அதே நேரம் ஆண்டுக்கணக்கில் வழக்குகளை இழுத்தடிப்பதும் சிக்கலை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்திய விதிகளை ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் பின்பற்ற நீதிமன்றம் ஆணையிடவேண்டும் என்றும் மத்திய அரசு தரப்பில் கோரப்பட்டு வருகிறது. உதிரி பாகங்களுக்கு இந்தியாவில் வரி 5 முதல் 15 விழுக்காடு விதிக்கப்படும் நிலையில் கம்பிளீட்லி நாக்டு டவுன் எனப்படும் CKD வகை பொருட்களுக்கு 30 முதல் 35 %வரி வசூலிக்கப்படுகிறது. சிகேடி வகை பொருட்களை சாதாரண உதிரிபாகங்கள் என்ற பெயரில் இறக்குமதி செய்து வரிஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது என்பதே வரி அதிகாரிகள் முன்வைக்கும் மிகப்பெரிய வாதமாக இருக்கிறது. இந்த வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கப்போகிறது என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.