மின்சார கார்களில் முதலீடு செய்யும் ஸ்கோடா..

இந்தியாவில் மின்சார கார்களை உற்பத்தி செய்து விற்க ஸ்கோடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் 1.4பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரிஏய்ப்பு புகாரில் சிக்கியுள்ள நிலையில், அதன் கிளை நிறுவனமான ஸ்கோடா இந்தியாவில் மின்சார கார்களை குறி வைக்கின்றது. ஆவ்டி உள்ளிட்ட விலை உயர்ந்த கார்களை குறைவான வரியில் இறக்குமதி செய்து வருவதாக அந்நிறுவனத்தின் மீது புகார் உள்ளது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 2.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஃபோக்ஸ் வாகன் நிறுவனம் செலுத்தவேண்டி வரும்.
சரியான பார்ட்னர் கிடைக்காதபட்சத்தில் தனித்தே செயல்பட இருப்பதாகவும் அந்நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் ஆண்டுக்கு 40லட்சம் கார்கள் விற்கப்படும் நிலையில் அதில் ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வாகன் கார்களின் பங்கு வெறும் 2%மட்டுமே உள்ளது. ஏற்கனவே மஹிந்திரா கார் நிறுவனத்துடன் ஸ்கோடா நிறுவனம் வணிக ஒப்பந்தம் ஒன்றையும் செய்துள்ளது. அதில் ஸ்கோடாவுக்கு மஹிந்திரா நிறுவனம் மின்சார கார்களுக்கான உதிரி பாகங்கள் செய்து தரவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சீனா மற்றும் ரஷ்யாவில் இருந்து வெளியேறிய ஸ்கோடா நிறுவனம் தற்போது தனது கவனத்தை இந்தியா பக்கம் திருப்பியுள்ளது. இந்தியாவில் 1.7பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் புதிய மின்சார வாகனங்களை தயாரிக்க ஸ்கோடா நிறுவனம் வணிக ஒப்பந்தம் செய்துள்ளது. உலகளவில் ஆட்டோ சந்தையில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவில் தங்கள் வணிகம் இருக்க வேண்டும் என்று விரும்புவதாக ஸ்கோடா நிறுவன அதிகாரிகள் விருப்பம் தெரிவிக்கின்றனர்.